Rock Fort Times
Online News

பழனி கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் “பார்க்கிங் கட்டணம்” என்ற பெயரில் அடாவடி வசூலில் ஈடுபடும் ஊழியர்- வைரலாகும் வீடியோ…!

திண்டுக்கல் மாவட்டம், பழனி நகராட்சி சார்பில் ஆண்டவர் பூங்கா சாலை, ஜவகர் வீதி, ஐயம்புளி சாலை, அருள்ஜோதி வீதி, இடும்பன் கோயில் தெரு, இட்டேரி சாலை, அடிவாரம் தெற்கு, கிரி வீதி ஆகிய இடங்களில் வாகங்களை நிறுத்த கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் சார்பில் கட்டணம் இல்லாமல் வாகனங்களை நிறுத்த இரண்டு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆனால், சம்பந்தப்பட்ட இடங்களில் நிறுத்தும் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்காமல் பழனி நகருக்குள் நுழையும் அனைத்து வாகனங்களுக்கும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனால் கோயில் நிர்வாகம் சார்பில் ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் வாகனங்களை நிறுத்தினாலும் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை உள்ளது.  தற்போது ஐயப்பன் சீசன் மற்றும் கார்த்திகை, மார்கழி, தை மாதங்கள் தொடர்ந்து வருவதால் பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர்.  அவ்வாறு வரும் பக்தர்கள் தங்களது வாகனங்களை நிறுத்த படாத பாடு பட வேண்டிய நிலை உள்ளது. அந்த வகையில் தனது வாகனத்தை நிறுத்த வந்த வாகன ஓட்டுனர் ஒருவரிடம் வாகனங்களுக்கு நுழைவு கட்டணம் வசூலிக்கும் ஊழியர்  ஒருவர் பார்க்கிங் கட்டணமாக ரூ.150 கேட்டுள்ளார். இதுகுறித்து அந்த வாகன ஓட்டுனர் பார்க்கிங்கே இல்லாமல் பார்க்கிங் கட்டணம் கேட்கிறீர்களே…
பார்க்கிங் எங்கே இருக்கிறது காட்டுங்கள் என்று கேட்டுள்ளார். அதற்கு அந்த ஊழியர் அதையெல்லாம் உன்னிடம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று கூறியதுடன் மரியாதை குறைவாக பேசி உள்ளார். இவ்வாறு வாகன கட்டணம் வசூலிப்பது தொடர்பாக அவர்களிடையே வாக்குவாதம்  நீள்கிறது. இதுதொடர்பான வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. பழனி நகராட்சி சார்பில் கார்களை நிறுத்த 70 ரூபாயும், வேன் களுக்கு  100 ரூபாயும், லாரிகளுக்கு 115 ரூபாயும், பேருந்துகளுக்கு 150 ரூபாயும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், வாகன ஓட்டுனரிடம் வாக்குவாதம் செய்யும் ஊழியர் பார்க்கிங் கட்டணமாக ரூ.150 கேட்கிறார். அதுவும் பார்க்கிங்கே இல்லாத இடத்தில்  வாகனங்களை நிறுத்த கட்டணம் கேட்பது அடாவடி வசூலாகவே பார்க்கப்படுகிறது. இதுதொடர்பாக நகராட்சி நிர்வாகம்  சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுப்பதோடு மட்டுமின்றி பார்க்கிங் வசதி மற்றும் அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்க முன்வர வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்