Rock Fort Times
Online News

திருச்சியில் மின் கம்பத்தை இடமாற்றம் செய்ய லஞ்சம் வாங்கிய மின்வாரிய ஊழியர் கைது…!

திருச்சி சுப்பிரமணியபுரத்தை சேர்ந்த தங்கையன் மகன் அந்தோணி (46). இவர் எலக்ட்ரிக்கல் மற்றும் பிளம்பிங் வேலைகளை கட்டிடங்களுக்கு ஒப்பந்த முறையில் செய்து கொடுத்து வருகிறார். அவ்வாறு திருச்சி கிராப்பட்டியில் உள்ள ஒரு வீட்டிற்கு எலக்ட்ரிக்கல் மற்றும் பிளம்பிங் வேலைகளை செய்து கொடுக்க ஒப்பந்தம் செய்து கொண்டு அதற்கான வேலைகளை செய்து வருகிறார். அந்த வீட்டிற்கு முன்பு உயர் மின்னழுத்த கம்பம் ஒன்று இடையூறாக இருப்பதால் அந்த கம்பத்தை சற்று தள்ளி அமைப்பதற்கு கிராப்பட்டியில் உள்ள உதவி செயற் பொறியாளர் அலுவலகத்தை அணுகி உள்ளார். அப்போது அங்கிருந்த வணிக உதவியாளர் அன்பழகன், சம்பந்தப்பட்ட இடத்தினை பார்வையிட்டு எஸ்டிமேட் தயார் செய்து, ரூ.35 ஆயிரம் ஆன்லைனில் செலுத்துமாறு அந்தோணியிடம் கூறியுள்ளார்.
அதன்பேரில், அந்தோணி உயர் மின்னழுத்த கம்பத்தை மாற்றி அமைப்பதற்கு 35 ஆயிரம் கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்திவிட்டு அதற்கான ரசீதினை அன்பழகனிடம் கொடுத்துள்ளார். அதற்கு அன்பழகன் ஒரு மாதம் கழித்து தன்னை வந்து பார்க்குமாறு கூறியுள்ளார். அதன் பேரில் அந்தோணி நேற்று (27.05.24) காலை கிராபட்டியில் உள்ள அலுவலகத்தில் அன்பழகனை சந்தித்து மின் கம்பம் மாற்றம் குறித்து கேட்டுள்ளார். அதற்கு அன்பழகன் ரூ.20 ஆயிரம் லஞ்சம் தந்தால் பணியை விரைந்து முடித்து தருவதாக கூறியுள்ளார். அதற்கு அந்தோணி தன்னால் அவ்வளவு தொகை தர இயலாது என்று கூறியதன் பேரில் அன்பழகன் 5000 குறைத்துக் கொண்டு 15 ஆயிரம் கொடுத்தால் மட்டுமே முடித்து கொடுப்பேன் என கண்டிப்பாக கூறியுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத அந்தோணி, இது குறித்து திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் அளித்தார். அங்கு, காவல்துணை கண்காணிப்பாளர் மணிகண்டன் அவருக்கு சில ஆலோசனைகள் கூறினார். அதனைத்தொடர்ந்து இன்று அந்தோணியிடமிருந்து அன்பழகன் ரூ.15 ஆயிரம் லஞ்சப் பணத்தை பெற்ற போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை சுற்றி வளைத்து பிடித்தனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

🔴: ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயில் || ஸ்ரீரெங்கநாச்சியார் நவராத்திரி பெருவிழா 6-ம் திருநாள்

1 of 872

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்