தமிழகத்தில் நடைபெற்று முடிந்த 2026 சட்டமன்ற பொதுத்தேர்தலில் போட்டியிட்ட தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய், சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டு தொகுதிகளிலும் வெற்றிபெற்றார். அரசமைப்பு விதிப்படி, ஒரு சட்டமன்ற உறுப்பினர் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றால், ஏதாவது ஒருதொகுதியை ராஜினாமா செய்ய வேண்டும். அதன்படி த.வெ.க.தலைவரும், தமிழக முதல்வருமான விஜய், திருச்சி கிழக்குத்தொகுதி எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து இத்தொகுதி காலியாக உள்ளதாக இன்று (மே.14) தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. முதலமைச்சர் விஜயால் ராஜினாமா செய்யப்பட்ட திருச்சி கிழக்குத் தொகுதியில், இன்னும் 6 மாதத்திற்குள் தேர்தல் நடைபெற இருக்கிறது. திருச்சி கிழக்கில் வெற்றி பெறுவது என்பது ஆளுங்கட்சியான த.வெ.க.வுக்கு இமேஜாகவும், எதிர்க்கட்சியான திமுகவிற்கு இழந்த செல்வாக்கை மீட்பதற்கான வழியாகவும் பார்க்கப்படுகிறது. ஆகவே, த.வெ.க – தி.மு.க ஆகிய இரண்டு கட்சிகளும் இப்போதே வேட்பாளர் தேர்வில் கவனம் செலுத்த தொடங்கி விட்டனர். ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரியான உ.சகாயம், லால்குடி தொகுதியில் இக்கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை தவறவிட்ட முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன், வி.சி.க. தலைவர் தொல்.திருமாவளவன், விஜயுடன் ஆரம்ப காலம் முதல் பயணித்துவரும் ஆர்.கே.ராஜா உள்ளிட்ட ஒரு டஜன் பெயர்களை த.வெ.கவின் வேட்பாளர்களாகும் வாய்ப்பு என இக்கட்சியின் விர்ச்சுவல் வாரியர்ஸ் சோசியல் மீடியாக்களில் பதிவிட்டு வைரலாக்கி வருகின்றனர். இந்நிலையில், திருச்சி தெற்கு மாவட்ட திமுக மாவட்ட செயலாளரான அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் இன்று( மே 14) நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திருச்சி கிழக்குத் தொகுதியில் போட்டியிட வலியுறுத்தி சிறப்பு தீர்மானத்தை நிறைவேற்றி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை பற்ற வைத்துள்ளனர்.

Comments are closed.