Rock Fort Times
Online News

2 ஆண்டுகால தி.மு.க. ஆட்சியில் 6.5 லட்சம் உழவர்கள் பயனடைந்துள்ளனர்…!

முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்...

தி.மு.க. வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கான கூட்டம் திருச்சியில் நேற்று நடந்தது. இதில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார். இன்று திருச்சி கேர் கல்லூரியில் வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் நடந்தது. இதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ள விவசாய எந்திரங்களை பார்வையிட்டார். மேலும், 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு திட்டத்தை துவக்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:-

மற்ற துறைகளை போல் வேளாண் துறையை வளர்த்து விட முடியாது. நிதி இருந்தால் மற்ற துறைகளை வளர்த்து விடலாம். ஆனால் வேளாண் துறையை வளர்க்க நிதிவளம் மட்டும் இன்றி நீர் வளமும் தேவை. திமுக அரசின் திட்டங்களால் உணவு உற்பத்தி செய்வதில் சாதனை படைத்துள்ளது . அனைத்து துறைகளும் வளர திமுக அரசு உழைத்து வருகிறது. குறுவைப் பயிர் சிறப்பு தொகுப்பு திட்டத்தை பெறுவதற்கான அவகாசம் ஆகஸ்ட் 15 வரை நீட்டிக்கப்படும். மத்திய அரசை விட அதிகமாக தமிழகத்தில் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. அரசின் திட்டங்களால் கடந்த 2 ஆண்டுகளில் 6.5 லட்சம் உழவர்கள் பயனடைந்துள்ளனர். 10 ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் மொத்தமே 2 லட்சத்து 20 ஆயிரம் வேளாண்மை மின் இணைப்புகளே வழங்கப்பட்டுள்ளது.ஆனால், 2 ஆண்டு கால திமுக ஆட்சியில் 1 லட்சத்து 50 ஆயிரம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆக, சொல்லாததையும் செய்வோம், சொல்லாமலும் செய்வோம். வேளாண்மையில் நவீன தொழில்நுட்ப அறிவை பயன்படுத்த வேண்டும். வேளாண்மைக்கு கண்காட்சி நடத்துவது அவசியம் .வேளாண்மை லாபம் தரும் தொழிலாக உயர்த்தப்பட வேண்டும். விளைச்சலை பெருக்கவும், பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுக்கவும் தமிழகஅரசு முனைப்பு காட்டி வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்