Rock Fort Times
Online News

கோவையில் இன்று (ஏப்.18) பிரதமர் மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின் போட்டி பிரச்சாரம்…!

பிரதமர் மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கோயம்புத்தூர் மாவட்டத்தில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளனர். இதையொட்டி, 2500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவிநாசி சாலையில் உள்ள கொடிசியா மைதானத்தில் இன்று (ஏப்.18) மாலை 5 மணியளவில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று, கோயம்புத்தூர் வடக்கு தொகுதி பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிக்கவுள்ளார். இதற்காக பிரம்மாண்ட மேடையும், சுமார் 5 லட்சம் பேர் அமரும் வகையிலான வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. பந்தல் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஒருபக்கம் பிரதமர் இன்று கோயம்புத்தூரில் பிரசாரம் செய்யும் நிலையில், மறுபுறம் இரவு 7 மணி அளவில் மேட்டுப்பாளையத்தில் நடைபெறும் பிரச்சார பொதுக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். மேட்டுப்பாளையம், ஊட்டி, கூடலூர், குன்னூர், கவுண்டம்பாளையம் , தொண்டாமுத்தூர் ஆகிய தொகுதிகளை சேர்ந்த வேட்பாளர்களை முன்னிறுத்தி இந்த பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் பிரச்சாரம் செய்கிறார். இதனிடையே, ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியில் நாளை (ஏப்.19) பிரச்சாரம் மேற்கொள்வதற்காக விமானம் மூலம் வருகை தரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இன்று இரவு கோயம்புத்தூரில் தங்குகிறார். பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் ஆகியோரின் கோயம்புத்தூர் வருகையை முன்னிட்டு, கோவை மாநகரம் மற்றும் மாவட்டத்தின் முக்கிய பகுதிகள் காவல்துறையின் கட்டுப்பாட்டில் வந்துள்ளது. 2500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்