விலையில்லா சைக்கிள் வழங்கும் விழாவில் திமுக- பாமகவினர் மோதல்- மாணவ- மாணவிகளின் கால்களில் விழுந்து மன்னிப்பு கேட்ட பாமக எம்எல்ஏ…
சேலம் மேற்கு சட்டசபை தொகுதி எம்எல்ஏவாக இருப்பவர் அருள். பாட்டாளி மக்கள் கட்சியை சேர்ந்த இவரது தொகுதிக்குட்பட்ட பாகல்பட்டி கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா இன்று(24-01-2024) நடந்தது. இதில் எம்எல்ஏ அருள் பங்கேற்றார். அப்போது திமுக நிர்வாகிகள் சிலர் அருளுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மாணவ-மாணவிகளுக்கு அவரை சைக்கிள் வழங்க விடாமல் செய்ததோடு அவரை பேச விடாமல் தடுத்ததாக கூறப்படுகிறது. அதாவது ”மாணவர்களுக்கு நாங்களே சைக்கிளை கொடுத்து விடுகிறோம். நீங்கள் தர வேண்டாம்” என திமுகவினர் கூறியுள்ளனர். அதற்கு அருள் எம்எல்ஏ, ”இது எனது தொகுதி. இதனால் மாணவ-மாணவிகளுக்கு சைக்கிள் வழங்கும் உரிமை உள்ளது” எனக்கூறியுள்ளார். இதையடுத்து இருத்தரப்புக்கும் வாக்குவாதம், மோதல் ஏற்பட்டுள்ளது. மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் இந்த வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அவர்கள் அதிர்ச்சிக்குள்ளாகினர். மாணவர்கள் பதறிப்போயினர். இதையடுத்து இருதரப்பையும் அங்கிருந்தவர்கள் சமாதானம் செய்தனர்.
இதையடுத்து எம்எல்ஏ அருள் விழாவில் பேசினார். அப்போது , ”நான் மாணவர்களிடம் உரையாடத்தான் வந்தேன். அரசியல் செய்ய வரவில்லை. ஒழுக்கத்தை கற்கும் இடத்தில் உங்களை அசிங்கப்படுத்திவிட்டார்கள். அவர்களுக்கும் சேர்த்தே காலில் விழுகிறேன்” என வருத்தம் தெரிவித்தார். மேலும் தான் வைத்து பேசிய மைக்கை அருகே இருந்தவரிடம் கொடுத்துவிட்டு தரையில் படுத்து மன்னிப்பு கேட்க முயன்றார். அவரை அங்கிருந்தவர்கள் தடுத்து நிறுத்த முயன்றனர்.இருப்பினும் அருள் எம்எல்ஏ அவர்களை மீறி தரையில் படுத்து மாணவ-மாணவிகளை நோக்கி கைகளை கூப்பி மன்னிப்பு கோரினார். 2 முறை இப்படி செய்ததால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது. இந்த வேளையில் பதறிப்போன மாணவ-மாணவிகள் தாங்கள் அமர்ந்து இருந்த இடத்தில் இருந்து எழுந்து நின்றனர். இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.