Rock Fort Times
Online News

திருச்சியில் அதிமுக முன்னாள் கவுன்சிலரின் மகனை படுகொலை செய்தது மதுரை கூலிப்படையினரா?- போலீசார் தீவிர விசாரணை… !

திருச்சி அரியமங்கலத்தைச் சேர்ந்தவர் கேபிள் சேகர். இவர் கேபிள் தொழில் மட்டுமின்றி பன்றி வளர்ப்பு, பைனான்ஸ் போன்ற தொழில்களையும் செய்து வந்தார்.
இவரது மனைவி கயல்விழி சேகர். அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஆவார். இவர்களுக்கு முத்துக்குமார், இளவரசன் என இரு மகன்கள். சேகரின் அண்ணன் பெரியசாமி. இவருக்கு தங்கமணி, சிலம்பரசன், லோகநாதன் என 3 மகன்கள். கூட்டுக்குடும்பமாக இருந்த சேகர், பெரியசாமி இருவரும் தங்களது வாரிசுகளை முன்னிலைப்படுத்த முயன்றதால் பங்காளி சண்டை ஏற்பட்டது. இதில் பெரியசாமி இறந்துவிடவே, அவரது பங்கு சொத்துகளை பிரித்து தருமாறு வாரிசுகள் கேட்டதால் பிரச்சனை மேலும் விஸ்வரூபமானது. இதில் கேபிள் சேகரை அவரது அண்ணன் மகன்கள் சேர்ந்து கடந்த 2011 ஆம் ஆண்டு வெட்டிக்கொலை செய்தனர்.
இதற்கு பழிக்குப் பழியாக சேகர் தரப்பினர் 2021ம் ஆண்டு பழிவாங்கினர். அதாவது தனது தந்தையை கொலை செய்த பெரியப்பா மகன் சிலம்பரசனை முத்துக்குமார் தரப்பினர் வெட்டிக் கொலை செய்தனர்.

இந்த கொலை சம்பவத்துக்கு அதே பகுதியைச் சேர்ந்த அவர்களது இரு குடும்பத்தினருக்கும் நெருங்கிய நண்பரான குட்டை பாலு என்பவர் முத்துக்குமாருக்கு உதவியுள்ளார். சிலம்பரசனை குறிப்பிட்ட இடத்துக்கு அழைத்து வந்து சிக்க வைத்ததும் பாலுதானாம். இதற்காக குறிப்பிட்ட தொகை தருவதாகவும் முத்துக்குமார் கூறியிருந்தாராம். திட்டமிட்டபடி கொலை முடிந்ததும் கூறியபடி தொகையை அவர் குட்டை பாலுவுக்கு தரவில்லையாம். இதை கேட்டபோது, அவரையும் முத்துக்குமார் மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால், பாலு அவரிடமிருந்து பிரிந்து சென்றுவிட்டார். இந்நிலையில்தான், தற்போது முத்துக்குமார், பெரியசாமி மகன்களான லோகநாதன் தலைமையிலான குழுவினரால் பழிக்குப்பழியாக நேற்று வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்திலும் குட்டை பாலுதான் பெரியசாமி குடும்பத்தினருக்கு உதவியதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளன. முத்துக்குமாரின் நடமாட்டம் மற்றும் அவரது நடவடிக்கைகள் குறித்த தகவல்களை அவ்வப்போது கூறி வந்துள்ளார். அதன் அடிப்படையில்தான் முத்துக்குமார் தீர்த்துக் கட்டப்பட்டுள்ளார் என்பது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும்,இந்த சம்பவத்தில் மதுரையைச் சேர்ந்த கூலிப்படை ஈடுபட்டிருக்கலாம் எனவும் போலீஸா ருக்கு சந்தேகம் எழுந்துள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு லோகநாதன் தரப்பினருடன் மதுரையைச் சேர்ந்த சிலர் சேர்ந்து சுற்றியதாக கூறப்படுகிறது. பன்றிகள் பிடிக்க அவர்களை அழைத்து வந்ததாக சொல்லப்படுகிறது. எனவே, மதுரையைச் சேர்ந்த கூலிப்படையினர் இந்த கொலையில் ஈடுபட்டார்களா? என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை பிடிக்க தனிப்படையும் அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் கொலை நடந்த இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த கொலை தொடர்பாக 5 பேரை பிடித்து போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்