மணப்பாறையில் பாரத சாரண, சாரணிய இயக்கத்தின் வைர விழா: ஜனாதிபதி திரவுபதி முர்முவுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சந்திப்பு…!
பாரத சாரண, சாரணிய இயக்கத்தின் வைர விழா மற்றும் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி நூற்றாண்டு விழா, அகில இந்திய அளவிலான பெருந்திரளணி ஆகியவை திருச்சி மாவட்டம், மணப்பாறை சிப்காட் வளாகத்தில் ஜனவரி 28-ந் தேதி முதல் பிப்ரவரி 3-ந் தேதி வரை நடைபெறுகிறது. பெருந்திரளணியில் 20,000 க்கும் மேற்பட்ட சாரண, சாரணியர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்கள், வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு தங்கள் கலாச்சாரம், பண்பாடு குறித்த செயல்பாடுகளை நிகழ்த்திக் காட்ட உள்ளனர். வீர தீர செயல்பாடுகள், விளையாட்டுகள் ஆகியவற்றை செய்து காட்ட உள்ளனர். இப்பெருந் திரளணிக்காக மேடை, அரங்கம், கூடாரங்கள், சமையற் கூடங்கள். உணவு அருந்தும் அரங்கங்கள், குளியலறைகள், கழிப்பறைகள், புகைப்பட கண்காட்சி அரங்குகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது ஒருபுறம் இருக்க இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்முவை புதுடெல்லியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, பள்ளிக்கல்வித்துறைஅமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேரில் சந்தித்து நடைபெறவிருக்கும் பாரத சாரண, சாரணியர் இயக்கத்தின் வைர விழா மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு நினைவு பெருந்திரளணி குறித்த தகவல்களை தெரிவித்து, தற்போது நடைபெற்று வரும் முன்னேற்பாடு பணிகளின் நிலை குறித்து எடுத்துரைத்தார்.
Comments are closed.