Rock Fort Times
Online News

அரசியல் களத்தில் ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் தமிழ் தாய் வாழ்த்து தீர்மானத்தை வரவேற்கிறேன்… எடப்பாடி பழனிசாமி..!

தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம் கொடுக்கும் முதலமைச்சரின் தனி தீர்மானம் சட்டப்பேரவையில் ஒரு மனதாக நிறைவேறியது. முதலமைச்சரின் தமிழ்த்தாய் வாழ்த்து தொடர்பான தனித்தீர்மானத்திற்கு ஆதரவாக பேசிய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக, தமிழ்த்தாய் வாழ்த்து தொடர்பான இந்த அரசின் தனித் தீர்மானத்தை முழு மனதோடு ஆதரித்து எனது கருத்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்த்தாய் வாழ்த்து என்பது வெறும் பாடல் அல்ல. அது தமிழ்மொழியின் தொன்மையையும், பெருமையையும், தமிழர்களின் பண்பாட்டு அடையாளத்தையும் வெளிப்படுத்துகின்றது. உலகம் முழுவதும் வாழும் தமிழர்களை உணர்வால் ஒருங்கிணைக்கும் ஒரு அடையாளமாகவும் அது திகழ்கிறது. தமிழ்மொழியின் வளர்ச்சிக்கும், தமிழ்நாட்டின் மற்றும் தமிழர்களின் பண்பாட்டு அடையாளத்தைப் பாதுகாப்பதற்கும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வரலாற்றுச் சிறப்புமிக்க பல பணிகளைச் செய்துள்ளது.
தமிழ்த்தாய் வாழ்த்து என்பது எந்த மொழிக்கும், எந்த இனத்திற்கும், எந்த மதத்திற்கும் எதிரானது அல்ல. தமிழர்கள் தங்களுடைய தாய்மொழிக்கு செலுத்தும் மரியாதையும் வணக்கமும்தான் தமிழ்த்தாய் வாழ்த்து. அரசியல் களத்தில் ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால், தமிழ் என்று வரும்போது நாம் அனைவரும் தமிழர்கள். தமிழ்மொழியின் உரிமை, வளர்ச்சி மற்றும் பெருமை என்று வரும்போது, இந்தப் பேரவை ஒரே குரலில் நிற்க வேண்டும். அந்த அடிப்படையில், தமிழ்நாட்டில் அமைந்துள்ள அனைத்து கல்வி நிறுவனங்கள், பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், அரசு அலுவலகங்கள், பொது நிறுவனங்கள் மற்றும் பொது அமைப்புகளின் நிகழ்ச்சிகள் தொடங்குவதற்கு முன்பு தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயமாகப் பாடப்பட வேண்டும் என்ற இந்த அரசின் தனித் தீர்மானத்தை, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக முழு மனதோடு ஆதரிக்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்