Rock Fort Times
Online News

கடுமையான நிதி நெருக்கடியிலும் நெல், கரும்புக்கான ஊக்கத்தொகையை உயர்த்தி உள்ளோம்…* சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் பெருமிதம்..!

இரண்டு நாட்கள் விடுமுறைக்கு பிறகு தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் இன்று(10-08-2026) தொடங்கி நடைபெற்று வருகிறது. கூட்டத்தொடர் தொடங்கியதும் முதலமைச்சர் விஜய் கொண்டு வந்த தமிழ் தாய் வாழ்த்துக்கு முதலிடம் கொடுக்கும் தனித் தீர்மானம் நிறைவேறியது. அதனைத் தொடர்ந்து சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் பேசிய முதலமைச்சர் விஜய், நெல் மற்றும் கரும்புக்கு அளிக்கப்படும் ஊக்கத்தொகை அதிகரிக்கப்படுவதாக அறிவித்தார். தமிழ்நாட்டின் நிதிநிலை சீராக இல்லாவிட்டாலும், நெல் மற்றும் கரும்பு பயிரிடும் விவசாயிகளின் நலனைப் பாதுகாக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கில், தமிழ்நாட்டின் வரலாற்றில் இல்லாத அளவிற்கு நெல் மற்றும் கரும்புக்கான ஊக்கத்தொகையை உயர்த்தி வழங்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. நெல் கொள்முதல் பருவம் வருகிற செப்டம்பர் 1ம் தேதி தொடங்க உள்ளது. குறைந்தபட்ச ஆதரவு விலையுடன், மாநில அரசின் ஊக்கத் தொகையாக சன்னரக நெல் ஒன்றுக்கு ரூ.289, பொதுரக நெல் ஒன்றுக்கு ரூ.159 உயர்த்தி வழங்கப்படுகிறது. இதன்மூலம் சன்னரக நெல்லுக்கு குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 2,750, பொதுரக நெல்லுக்கு குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,600 கிடைக்கும். மாநில அரசு நெல்லுக்கான ஊக்கத்தொகையை ஒரே ஆண்டில் ரூ.156 க்கு மேல் உயர்த்தி வழங்குவது தமிழ்நாட்டின் வரலாற்றில் இதுவே முதல் முறையாகும்.

அதேபோன்று, 2025-26 கரும்பு அறுவடைப் பருவத்தில் சர்க்கரை ஆலைகளில் பதிவு செய்து கரும்பு வழங்கும் விவசாயிகளுக்கு, மத்திய அரசின் நியாயமான மற்றும் லாபகரமான விலையாக மெட்ரிக் டன் ஒன்றுக்கு ரூ. 3,290.50 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதற்கு மேல், தமிழ்நாடு அரசின் சார்பில் சிறப்பு ஊக்கத் தொகையாக மெட்ரிக் டன் ஒன்றுக்கு ரூ. 709.50 வழங்கப்படும். இதன்மூலம் விவசாயிகளுக்கு ஒரு மெட்ரிக் டன் கரும்புக்கு மொத்தம் ரூ.4 ,000 கிடைக்கும். கடந்த ஐந்து ஆண்டுகளில் கரும்புக்கான சிறப்பு ஊக்கத்தொகை ரூ. 156 மட்டுமே உயர்த்தி வழங்கப்பட்ட நிலையில், தற்போது முதல் ஆண்டிலேயே ரூ. 360.50 உயர்த்தப்பட்டுள்ளது என்பதையும் இந்த மாமன்றத்தில் குறிப்பிட விரும்புகிறேன். எங்கள் அரசு விவசாயிகளை ஒருபோதும் கைவிடாது. விவசாயம் சிறக்கவும், விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்படவும், அவர்களின் நலனைப் பாதுகாக்கவும் என்றும் உறுதுணையாக இருக்கும் என்றார்” எனத் தெரிவித்தார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்