பாரத சாரணர் இயக்குனரகத்தின் வைர விழாவை ரூ.10 கோடியில் திருச்சியில் நடத்த முடிவு- அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி…!
பாரத சாரணர் இயக்குனரகத்தின் வைர விழாவை ரூ.10 கோடி மதிப்பில் திருச்சியில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார். பாரத சாரணர் இயக்குனரகத்தின் வைர விழா ஆண்டை முன்னிட்டு தேசிய அளவிலான விழா ரூ.10 கோடியில் நடத்தப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன் அடிப்படையில் இந்த வைர விழாவை நடத்துவது தொடர்பாக தமிழ்நாடு சாரணர் இயக்குனரகத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு பள்ளிக் கல்வித் துறை அமைச்சரும், தமிழ்நாடு சாரணர் இயக்குநரக மாநிலத் தலைவருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமை தாங்கினார். இதில் பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் ச.கண்ணப்பன், தொடக்கக்கல்வித் துறை இயக்குநர் பூ.ஆ.நரேஷ், சாரணர் இயக்குனரகத்தின் மாநில முதன்மை ஆணையர் க.அறிவொளி உட்பட பலர் பங்கேற்றனர். கூட்டத்தில், அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசுகையில், பாரத சாரணர் இயக்குனரகத்தின் வைர விழாவை சிறப்பாக கொண்டாடுவதன் மூலம் தமிழகத்தின் பெருமையை உலகம் முழுவதும் நிலைநாட்ட ஒரு நல்ல வாய்ப்பு நமக்கு கிடைத்துள்ளது. முதற்கட்டமாக 38 நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளோம். அதற்கான பதிலை பொறுத்து விழாவை தேசிய அல்லது சர்வதேச அளவில் நடத்துவது குறித்து முடிவு செய்வோம். ரூ.10 கோடி செலவில் திட்டமிடப்படும் வைரவிழாவை முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரில் நடத்த அனுமதி பெற்றுள்ளோம். எனவே, அதை சிறப்பாக நடத்தி முடிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்யவேண்டும். உறுப்பினர்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும். குறைந்தபட்சம் 12 லட்சம் என்ற இலக்கை எட்ட வேண்டும் என்றார்.
Comments are closed.