சக்தி ஸ்தலங்களில் முதன்மையானதாக விளங்கும் திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து அம்மனை தரிசித்து செல்கின்றனர். திருவிழா நாட்களில் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருக்கும். இன்று(03-08-2024) ஆடி 18 என்பதால் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்து அம்மனை தரிசித்தனர். கோவிலுக்கு வருவதற்கு முன்பாக சமயபுரம் நான்கு ரோடு பகுதியில் பிரம்மாண்ட நுழைவு வாயில் ஒன்று இருந்தது.
கடந்த 40 வருடங்களுக்கு முன்பு ஸ்ரீரங்கத்தை சேர்ந்த கோபால செட்டியார் என்பவர் இதனை கட்டினார்.
அதன்பிறகு, இந்து சமய அறநிலையத்துறை சார்பாக அவ்வப்போது மராமத்து பணிகள் மற்றும் பெயிண்டிங் அடித்து புதுப்பிக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில் இன்று அதிகாலை 2 மணி அளவில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உடையார் பாளையத்தைச் சேர்ந்த செல்வக்குமார் என்பவர் நெல் மூட்டைகளை கனரக வாகனத்தில் ஏற்றிக்கொண்டு மண்ணச்சநல்லூர் செல்வதற்காக வந்துள்ளார். அப்போது நுழைவு வாயிலின் ஒரு பகுதியில் கனரக லாரியானது மோதியதில் தூண்கள் சேதம் அடைந்து விரிசல் ஏற்பட்டது. இதனால், நுழைவுவாயில் எந்த நேரத்திலும் இடிந்து கீழே விழும் அபாய நிலை ஏற்பட்டது. இதனை அறிந்த சமயபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து போக்குவரத்தை நிறுத்தி இருபுறமும் இரும்பு பேரிகார்டுகளை கொண்டு தடுப்புகள் அமைத்தனர். மேலும், இதுகுறித்து ஓட்டுனர் செல்வகுமாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் பக்தர்களின் பாதுகாப்பு கருதி நுழைவு வாயிலை இடிக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, நுழைவு வாயிலின் மேற்பகுதியில் இருந்த விநாயகர், மாரியம்மன், முருகன் சிலை மற்றும் இருபுறமும் இருந்த பொம்மைகள் அகற்றப்பட்டன. பின்னர், அப்பகுதியில் மின்சாரம் நிறுத்தப்பட்டு நுழைவாயில் இடித்து அகற்றப்பட்டது. அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் உத்தரவின்பேரில் 30-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
Comments are closed.