Rock Fort Times
Online News

காதலனுக்கு விஷம் கொடுத்து கொன்ற காதலிக்கு தூக்கு தண்டனை- கேரள நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு…!

கேரளாவில், விஷம் கொடுத்து காதலனை கொலை செய்த வழக்கில் காதலி கிரீஷ்மாவுக்கு தூக்கு தண்டனை விதித்து கேரள நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது. கன்னியாகுமரி மாவட்ட எல்லையான கேரள மாநிலம் பாறசாலை மூரியங்கரையைச் சேர்ந்தவர் ஷாரோன்ராஜ்(23). திங்கள்சந்தை அருகே நெய்யூரில் தனியார் கல்லூரியில், ‘ரேடியாலஜி’ இறுதியாண்டு படித்து வந்தார். கல்லூரிக்கு பஸ்சில் வந்து சென்றபோது, களியக்காவிளை அருகே ராமவர்மன்சிறையைச் சேர்ந்த கிரீஷ்மா, (22) என்ற மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இதற்கு கிரீஷ்மாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், ராணுவ வீரர் ஒருவருடன் கிரீஷ்மாவுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இதனால் கிரீஷ்மா, தன் காதலன் ஷாரோனுடன் தொடர்பை குறைத்தார். ஆனால், ஷாரோன் தொடர்ந்து அவருடன் பேச முயற்சித்தார். இருவரும் நெருக்கமாக இருந்த போட்டோக்கள் ஷாரோனிடம் இருந்ததால், அவரை வீட்டுக்கு அழைத்த கிரீஷ்மா, கஷாயத்தில் காதலனுக்கு விஷம் கலந்து கொடுத்தார். இதனைக் குடித்த அவருக்கு வாந்தி ஏற்பட்டது. பின்னர், திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். இது குறித்த புகாரின் அடிப்படையில் பாறசாலை போலீசார் கிரீஷ்மாவை கைது செய்து, நெடுமங்காடு போலீஸ் ஸ்டேஷனில் விசாரணை நடத்தினர். அப்போது, அவர் தற்கொலைக்கு முயன்றார். இந்த கொலை வழக்கில் கிரீஷ்மாவுடன் சேர்த்து அவரது தாய் சிந்து மற்றும் மாமா நிர்மல்குமார் நாயர் ஆகியோரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு நெய்யாற்றின் கரை கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. பல்வேறு கட்ட விசாரணைக்குப் பிறகு கடந்த 17ம் தேதி தீர்ப்பை வெளியிட்டது. குற்றம்சாட்டப்பட்ட கிரீஷ்மா மற்றும் அவரது தாய்மாமன் நிர்மல்குமார் நாயரை குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டது. மேலும், கிரீஷ்மாவின் தாயார் சிந்துவுக்கு எதிராக போதிய ஆதாரங்கள் இல்லை என்று அவரை விடுதலை செய்தும் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்தநிலையில், இவர்களுக்கான (ஜன.,20) தண்டனை விபரத்தை நீதிமன்றம் இன்று (20-01-2025) அறிவித்தது. அதன்படி, காதலி கிரீஷ்மாவுக்கு தூக்கு தண்டனை விதித்து நெய்யாற்றின்கரை கூடுதல் அமர்வு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.மேலும், அவரது மாமன் நிர்மல்குமார் நாயருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்