திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் தாலுகா, திருவானைக்காவல் அருகே உள்ள மேல கொண்டையம் பேட்டை தெற்கு தெருவை சேர்ந்தவர் பரணிதரன் (வயது 38). இவருடைய மனைவி திவ்யா(32). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். பரணிதரன், கார் டிரைவராக பணிபுரிந்து வந்தார். திவ்யா, திருச்சி மத்திய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள தனியார் தங்கும் விடுதி ஒன்றில் வரவேற்பாளராக பணியாற்றி வருகிறார். இவர் இன்று (03-02-2024) வழக்கம் போல பணிக்கு சென்று விட்டார். குழந்தைகளுடன் பரணிதரன் வீட்டில் இருந்துள்ளார். அப்போது, ஒரு காரில் அங்கு வந்த நான்கு பேர் கொண்ட மர்மகும்பல் அரி வாள்களுடன் பரணிதரன் வீட்டுக்குள் புகுந்தனர். பின்னர் அங்கிருந்த பரணிதரனை சரமாரியாக அரி வாளால் வெட்டிவிட்டு காரில் ஏறி தப்பி சென்று விட்டனர். இதில், படுகாயம் அடைந்த பரணிதரன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார், லால்குடி டிஎஸ்பி அஜய்தங்கம் மற்றும் கொள்ளிடம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பரணிதரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவ இடத்திற்கு மோப்பநாய் லீலி வரவழைக்கப்பட்டு மோப்பம் பிடிக்க வைக்கப்பட்டது. சிறிய தூரம் ஓடிய மோப்பநாய் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. கொலை நடந்த வீட்டில் கைரேகை நிபுணர்கள், மர்ம நபர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர்.
பின்னர், இந்த கொலை சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து பரணிதனை கொலை செய்தவர்கள் யார்?, எதற்காக கொலை செய்தனர்?, தொழில் போட்டி காரணமா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், பரணிதரனை கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய மர்மகும்பலை வலைவீசி தேடி வருகின்றனர். திருச்சியில் பட்டப் பகலில் நடந்த இந்த கொலை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.