திருச்சி அரியமங்கலம் திடீர் நகர் பகுதியில் ரெயில்வே நிா்வாகத்திற்கு சொந்தமான முட்புதர் பகுதியில் நாட்டு வெடிகுண்டுகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக திருச்சி மாநகர போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்று ( 11.08.2023 ) அதிகாலை போலீஸ் கமிஷனர் என். காமினி ஐபிஎஸ் ஆலோசனையின் படி உதவி போலீஸ் கமிஷனர் காமராஜ் தலைமையில் தனிப்படை போலீசார் வெடிகுண்டு நிபுணர்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். முட்புதா் பகுதியில் தேடியபோது மண்ணுக்கடியில் 3 நாட்டு வெடிகுண்டுகள் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார் வெடிகுண்டு நிபுணர்கள் மூலம் அந்த வெடிகுண்டுகளை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இது மிகவும் சக்தி வாய்ந்த நாட்டு வெடிகுண்டு என கூறப்படுகிறது. பிரபல ரவுடி ஒருவர் வெளிமாநிலத்தில் இருந்து வாங்கி பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. மேலும் அந்தப் பகுதியில் இரு ரவுடிகளுக்கிடையே கோஷ்டி மோதல் இருந்து வருகிறது. இதில் ஒரு ரவுடி அவரது எதிரியை அழிப்பதற்காக நாட்டு வெடிகுண்டு வாங்கி மறைத்து வைத்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். அதன் அடிப்படையில் ஒரு சில ரவுடிகளை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சியில் நாட்டு வெடிகுண்டு கைப்பற்றப்பட்ட சம்பவம் அரியமங்கலம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் குறித்து பொன்மலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Comments are closed, but trackbacks and pingbacks are open.