கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணங்கள்! சி.பி.ஐ. விசாரணை கேட்கிறார் எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி!
கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் இரண்டாவது நாள் அமர்வு கூடியது. கேள்வி நேரம் தொடங்கும் முன், அதிமுக எம்எல்ஏக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். மானிய கோரிக்கையை தவிர்த்துவிட்டு, கள்ளச்சாராய விவகாரத்தை விவாதிக்க அதிமுகவினர் கோரிக்கை விடுத்தனர். மேலும், காகிதங்களை தூக்கி காண்பித்து, இருக்கையை முற்றுகையிட்டதால் சபாநாயகர் அப்பாவு கண்டித்தார். அமளியில் ஈடுபட வேண்டாம் என்றும், அமைதியாக இருக்குமாறும் அதிமுக எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் அப்பாவு அறிவுறுத்தினார். இருப்பினும் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால், அதிமுகவினரை சட்டசபையில் இருந்து வெளியேற்றுமாறு காவலர்களுக்கு சபாநாயகர் உத்தரவிட்டார். இதையடுத்து, சட்டசபையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டனர்.இதைடுத்து பேரவைக்கு வெளியே எடப்பாடி பழனிசாமி நிருபர்களிடம் கூறியதாவது: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 50 பேர் உயிரிழந்ததாக தகவல் வந்திருக்கிறது. பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனை, கள்ளக்குறிச்சி அரசு பொது மருத்துவமனை, சேலம் அரசு பேருந்து மருத்துவமனையில் 154 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.அதில், பாண்டிச்சேரியில் 16 பேர் கவலைக்கிடமாக இருப்பதாகவும் சேலத்தில் 30 பேர் கண் தெரியாமல் இருப்பதாகவும் தகவல் வந்துள்ளது. இது தொடர்பாக, சட்டப்பேரவையில் பேசுவதற்காக பேரவை தலைவரிடம் கேட்டோம் அனுமதி மறுத்து வெளியே அனுப்பி விட்டார். இந்த சம்பவம் நெஞ்சை பதற வைக்கக்கூடிய சம்பவம். நாட்டையே உலுக்கி இருக்கிறது.சட்டப்பேரவையில் இது தொடர்பாக பேச வாய்ப்பு கொடுக்கவில்லை, மக்களின் பிரச்சினையை சட்டப்பேரவையில் பேசுவது எங்களின் கடமை. ஏழை, எளிய தாழ்த்தப்பட்ட ஆதிதிராவிடர் மக்கள் கள்ளச்சாராயம் குடித்து இறந்திருக்கிறார்கள். இதை எல்லாம் பேச வேண்டும் என்பதற்காக தான் சட்டப்பேரவையில் அனுமதி கேட்டோம். வலுக்கட்டாயமாக எங்களை வெளியே அனுப்பி விட்டார்கள். சட்டப்பேரவையில் எங்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை, பேரவை தலைவர் நடுநிலையோடு இருக்க வேண்டும், பேசுவதற்கு எங்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று, தொடர்ந்து குரல் கொடுத்தோம். ஆனால், எங்களை வெளியேற்றி விட்டார்கள். எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் தொடர்ந்து உள்ளே பேசுவதற்கு குரல் கொடுத்தார். அவரை தூக்கி கொண்டு வெளியே வந்து விட்டார்கள். அவரை கைது செய்யும் அளவிற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. எதிர்க்கட்சிகளின் குரல் சட்டமன்றத்தில் ஒலிக்க வேண்டும். எதிர்க்கட்சித் துணைத் தலைவரை கைது செய்த போக்கு வன்மையாக கண்டிக்கத்தக்கது. இந்த விகாரத்தில் சிபிஐ விசாரணை வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed.