திருச்சி மண்டலத்தில் 91 கள்ளச்சாராய வழக்குகள் பதிவு : 15 பேர் குண்டர் சட்டத்தில் கைது! மத்திய மண்டல ஐ.ஜி தகவல்
கள்ளக்குறிச்சி கருணா நகர் அருகே கள்ள சாராயம் குடித்து இதுவரை 50க்கும் மேற்பட்டவர்கள் பலியாகி உள்ளனர். 150 க்கும் மேற்பட்டவர்களுக்கு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றன. இது தமிழகம் மட்டுமல்லாவது ஒட்டுமொத்த இந்தியாவையே உலுக்கும் சம்பவமாக உருவாகியுள்ளது. இதன் எதிரொலியாக மாநில அரசு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. காவல்துறையும் பல்வேறு சோதனைகள், கைது நடவடிக்கைகள், சாராய ஊறல்கள் அழிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், திருச்சி மத்திய மண்டலத்தில் கள்ளச்சாரயத்தை தடுக்கும் வகையில் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து போலீஸ் ஐ.ஜி. க. கார்த்திகேயன் தெரிவித்ததாவது., மத்திய மண்டலத்தில் அனைத்து மாவட்டப் பகுதிகளிலும், காவல்துறை கண்காணிப்பாளர்கள், துணை கண்காணிப் பாளர்கள், காவல் ஆய்வாளர்கள் தலைமையில், ஏராளமான போலீஸார் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு ள்ளனர். கள்ளச்சாராயம் புழக்கத்தில் உள்ளதாக சந்தேகப்படும் பகுதிகளில், அதிரடி சோதனையிலும் ஈடுபட்டு, வழக்குகளும் பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில்,மத்திய மண்டலத்திற்குட்பட்ட, திருச்சி மாவட்டத்தில் 4 வழக்குகளும், புதுக்கோட்டையில் 7, கரூரில் 17 , பெரம்பலூரில் 12, அரியலூரில் 4, தஞ்சாவூரில் 11, திருவாரூரில் 24, நாகப்பட்டினத்தில் 8, மயிலாடுதுறையில் 4 என மொத்தம் 91 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கள்ளச்சாராய வழக்குகளில் ஏற்கெனவே, குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் 15 பேர் மீது கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஏற்கனவே சாராய வழக்குகளில் தொடர்பு வைத்திருந்த 1,265 பேரிடம் விசாரணையும் நடத்தப்பட்டு வருகிறது. திருச்சி மாவட்டத்தில், கடந்த ஒரு வருடத்தில், கள்ளச்சாராயம் காய்ச்சி விற்றது தொடர்பாக 203 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. வியாழக்கிழமை ஒரே நாளில், 197 அதிரடி சோதனைகள் நடத்தப்பட்டதுடன் மேலும் சில மாதங்களுக்கு தொடர்ந்து தினசரி 200 சோதனைகள் நடத்தவும் உத்தரவிடப் பட்டுள்ளது. ஒரு நாளில் நடத்திய சோதனையில் மட்டும் ரூ. 3.20 லட்சம் மதிப்புள்ள சாராய ஊறல்கள் அழிக்கப்பட்டு, தொடர்புடைய பொருட்கள் பறிமுதலும் செய்யப்பட்டுள்ளது என்றார்.
Comments are closed.