Rock Fort Times
Online News

இலங்கை அகதிகளிடம் லஞ்சம் கேட்பதாக புகார்: திருச்சி கே.கே.நகர் எஸ்.எஸ்.ஐ. சஸ்பெண்ட்…!

திருச்சி, சுப்பிரமணியபுரம் அருகே உள்ள  கொட்டப்பட்டில் இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாம் உள்ளது.  இம் முகாமில், 70-க்கும் மேற்பட்ட இலங்கையைச் சேர்ந்த குடும்பங்கள் வசித்து வருகின்றன.  இவர்கள் பணி நிமித்தமாக வெளியே சென்று வருவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளது.  வெளியில் செல்லும் நபர்கள்,   தாங்கள் வெளியே செல்வது குறித்த காரணங்களை அங்குள்ள பதிவேட்டில் நாள்தோறும்  பதிவிட வேண்டும் என்பது கட்டாயம்.  இதற்காக தனி தாசில்தார் நியமிக்கப்பட்டுள்ளார்.  மேலும், திருச்சி  கே.கே.நகர் காவல் நிலைய போலீசார் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுவார்கள்.  இந்தநிலையில் கேகே நகர் காவல் நிலையத்தில்  சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வரும் மலையாண்டி என்பவர் வெளியே சென்று வரும்  இலங்கை அகதிகளிடம் லஞ்சம் கேட்பதாக புகார் எழுந்தது.  புகாரின் அடிப்படையில் திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் காமினி உத்தரவின்பேரில் கே.கே. நகர் காவல் ஆய்வாளர் பாலகிருஷ்ணன் விசாரணை மேற்கொண்டு, புகாரில் முகாந்திரம் இருப்பதாக அறிக்கை சமர்ப்பித்தார்.  இதனையடுத்து மலையாண்டியை பணியிடை நீக்கம்( சஸ்பெண்ட்) செய்து ஆணையர் காமினி உத்தரவிட்டார்.  கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் முன்பு பொரிகடலை வியாபாரம் செய்து வரும் வியாபாரியிடம் ஓசியில் பட்டாணி கேட்ட சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்