மதுபோதையில் வாகன ஓட்டுநர்களிடம் வசூல் வேட்டை: திருச்சி போலீஸ்காரர் ஆயுதப்படைக்கு தூக்கியடிப்பு… ( வீடியோ இணைப்பு)
திருச்சி சிட்டி பொன்மலை சர்வீஸ் சாலையில் நேற்று மாலை போலீஸ்காரர் ஒருவர் நின்று கொண்டு அந்த வழியாக ஹெல்மெட் அணியாமல் வந்தவர்கள் மற்றும் லைசன்ஸ் இல்லாதவர்கள், இன்சூரன்ஸ் இல்லாதவர்கள் போன்றவர்களிடம் அபராதம் விதித்து வசூல் வேட்டை நடத்தி உள்ளார். அவர் மீது மதுவாடை வீசியதால் வாகன ஓட்டிகளில் சிலருக்கு அவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. இதுகுறித்து அவர்கள் டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் பணியில் இருந்த போக்குவரத்து காவலருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், அந்த நபரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், திருச்சி மாவட்டம் புலிவலம் காவல் நிலையத்தில் காவலராக பணி புரிந்து வரும் சந்தோஷ்குமார் என்பதும், அந்த காவல் நிலையத்திற்கு வழங்கப்பட்ட அபராதம் விதிக்கும் கருவி பழுதானதால், அதனை பழுது நீக்க நேற்று காலை திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு கொண்டு வந்ததும் தெரிய வந்தது. பின்னர் அதனை சரி செய்து கொண்டு மாலையில் புலிவலம் புறப்பட்ட சந்தோஷ்குமார், மது அருந்தியுள்ளார். தொடர்ந்து மது போதையில் இருந்த அவர் பொன்மலை சர்வீஸ் சாலையில் நின்று கொண்டு வாகன ஓட்டுநர்களிடம் வசூல் வேட்டை நடத்தி உள்ளது தெரிய வந்தது. இதனையடுத்து அவர் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
Comments are closed.