Rock Fort Times
Online News

காரின் மேற்கூரையில் 40 கி.மீ. தூரம் பயணித்து குட்கா கும்பலை மடக்கிய காவலர் வேல்முருகனை அழைத்து பாராட்டிய முதல்வர் விஜய்…!

கோவை மாவட்டம், கோவில்பாளையம் காவல் நிலைய தலைமை காவலர் வேல்முருகன் மற்றும் உதவி ஆய்வாளர் விக்னேஷ் உள்ளிட்ட காவலர்கள், வழக்கமான வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கர்நாடக மாநிலத்தில் இருந்து வந்த சொகுசு கார் ஒன்றை சந்தேகத்தின் பேரில் காவலர்கள் நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது, காரின் பின்புறத்தில் சாக்கில் பொருட்கள் இருப்பதைப் பார்த்த உதவி ஆய்வாளர் விக்னேஷ், அவற்றைச் சோதனையிட முயன்றார். அப்போது காரில் இருந்த ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த 3 பேர், காவல்துறையினரை தள்ளிவிட்டு காரை அதிவேகமாக ஓட்டிச் சென்றனர்.
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த தலைமை காவலர் வேல்முருகன், உடனடியாக ஓடும் காரின் மேற்கூரையின் மேல் பாய்ந்து பிடித்துக் கொண்டார். ஆனால், கடத்தல்காரர்கள் தலைமை காவலர் காரின் மீது இருப்பதையும் பொருட்படுத்தாமல், சுமார் 40 கிமீ தொடர்ந்து காரை வேகமாக ஓட்டிச் சென்றனர். இறுதியாக அவிநாசி அருகே அந்த சொகுசு காரை போலீசார் மடக்கிப் பிடித்தனர். காரில் இருந்து 233 கிலோ குட்காவை பறிமுதல் செய்த போலீசார், மூவரை கைது செய்தனர். இதனிடையே காரின் மேற்கூரையில் காவலர் வேல்முருகன் அபாய நிலையில் படுத்தபடி 40 கிலோமீட்டர் பயணம் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதனையடுத்து மேற்கு மண்டல காவல்துறை தலைவர் ரம்யா பாரதி, துணை தலைவர் சாமிநாதன், கோயம்புத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன் குமார் ஆகியோர் தலைமைக் காவலர் வேல்முருகனுக்கு பாராட்டு தெரிவித்தனர். இந்நிலையில் தலைமை காவலர் வேல்முருகனை, தலைமைச் செயலகத்திற்கு அழைத்து முதல்வர் விஜய் நேரில் பாராட்டு தெரிவித்தார். சம்பவம் தொடர்பாக காவலர் வேல்முருகனிடம் முதல்வர் விஜய் விவரங்களை கேட்டறிந்தார். இதனிடையே தமிழக டிஜிபி-யும் தலைமை காவலருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்