பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கிய 5 நிமிடங்களில் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தது. அனைத்து ரயில்களும் ஹவுஸ் புல் ஆனது. இதனால் பயணிகள் பெரும் ஏமாற்றமடைந்தனர். சென்னையை பொறுத்தவரை தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, விருதுநகர், மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர். இதேபோல கோவை, ஈரோடு, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களை சார்ந்தவர்களும் ஏராளமானோர் வசித்து வருகிறார்கள். இவர்கள் வியாபாரம் உள்ளிட்ட பல்வேறு வர்த்தக பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மாணவர்கள் தங்கியிருந்து மேல்படிப்பையும் தொடர்ந்து வருகின்றனர். அதுமட்டுமின்றி ஏராளமானோர் அலுவலகம் உள்ளிட்டவற்றில் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் பொங்கல், தீபாவளி, கிறிஸ்துமஸ், ரம்ஜான் மற்றும் கோயில் திருவிழாக்கள் உள்ளிட்ட விசேஷ தினங்களில், தங்கள் சொந்த ஊருக்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்நிலையில் அடுத்தாண்டு ஜனவரி 15ம் தேதி (வெள்ளிக்கிழமை) பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்திய ரயில்வேயில் நடைமுறையில் உள்ள 60 நாட்களுக்கு முன்பான டிக்கெட் முன்பதிவு முறையின்படி, பயணிகள் தங்களது ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம்.
அந்தவகையில், பொங்கல் பண்டிகைக்கு முன்னதாக ஜனவரி 13ம் தேதி ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. இதையடுத்து, பயணிகள் ரயில்வே முன்பதிவு கவுன்ட்டர்கள் மற்றும் இணையதளம் வாயிலாக டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய ஆர்வம் காட்டினர். பொங்கல் பயணத்துக்கான முன்பதிவு தொடங்கியதும் பயணிகள் ஒரே நேரத்தில் டிக்கெட் பதிவு செய்ய முயன்றனர். இதன் காரணமாக தென் மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து ரயில்களிலும் முன்பதிவு வேகமாக நிரம்பின. முன்பதிவு தொடங்கிய 5 நிமிடங்களிலேயே அந்த ரயில்களில் டிக்கெட்டுகள் முழுமையாக விற்றுத் தீர்ந்தது. குறிப்பாக சென்னை எழும்பூரில் இருந்து தூத்துக்குடிக்கு இயக்கப்படும் முத்துநகர் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸில் அனைத்து டிக்கெட் விற்று தீர்ந்து, மேற்கொண்டு டிக்கெட் புக் செய்ய முடியாத அளவுக்கு ‘ரெக்ரெட்’ நிலை ஏற்பட்டுள்ளது. இது 2ம் வகுப்பு படுக்கை வகுப்பு, 3ஏசி, 2ஏசி, 1ஏசி என அனைத்து வகுப்புகளிலும் இதே நிலை தான் நீடிக்கிறது. இதேபோல சென்னையில் இருந்து கோவைக்கு இயக்கப்படும் அனைத்து ரயில்களிலும் வெயிட்டிங் லிஸ்ட் 100ஐ கடந்துள்ளது. டிக்கெட்டுகள் அனைத்தும் 5 நிமிடத்தில் விற்று தீர்ந்ததால் பொங்கல் பண்டிகையையொட்டி சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டமிட்டிருந்த ஏராளமான பயணிகள் டிக்கெட் கிடைக்காமல் ஏமாற்றம் அடைந்தனர். அதே போல பொங்கலுக்கு முந்தைய நாளான ஜனவரி 14ம் தேதி (வியாழக்கிழமை) பயணம் செய்வதற்கான ரயில் டிக்கெட் முன்பதிவு நாளை காலை 8 மணிக்கு தொடங்குகிறது.

Comments are closed.