Rock Fort Times
Online News

டாஸ்மாக் கடைகளை சுத்தமாக பராமரிக்க மாதந்தோறும் ரூ.5000 வழங்கப்படும்…* நிர்வாகம் அதிரடி உத்தரவு…!

அக்டோபர் 1 முதல், டாஸ்மாக் கடைகளை சுத்தமாக பராமரிக்கும் வகையில் பராமரிப்பு தொகை வழங்கப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் அதிரடியாக அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள பதிவில், “ டாஸ்மாக் சில்லறை விற்பனைக் கடைகளில் பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் நுகர்வோர் ஆகிய இரு தரப்பினருக்கும் ஏற்ற வகையில் தூய்மையான, சுகாதாரமான மற்றும் சிறந்த பணிச்சூழலைப் பராமரிப்பதன் அவசியத்தையும், தற்போதைய தேவைகளையும் கருத்தில் கொண்டு, பல்வேறு நலத்திட்ட நடவடிக்கைகளுக்கு டாஸ்மாக் நிர்வாகக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி, இதுவரை நடைமுறையில் இருந்த சிறு ரொக்கத் தொகை வசதிக்கு மாற்றாக, சில்லறை விற்பனைக் கடைகளைத் தினமும் சுத்தம் செய்தல் மற்றும் குடிநீர் மற்றும் பிற அடிப்படை வசதிகளை வழங்குதல் ஆகியவற்றிற்காக பின்வரும் விகிதங்களில் மாதாந்திரத் தொகையை வழங்குவதற்கு இதன்மூலம் அனுமதி அளிக்கப்படுகிறது. அந்தவகையில் மாநகராட்சி பகுதியில் உள்ள 842 கடைகளுக்கு ரூ.5,000, நகராட்சி / பேரூராட்சி பகுதியில் உள்ள 835 கடைகளுக்கு ரூ.4000, ஊரக / கிராம பஞ்சாயத்து பகுதிகளில் உள்ள 2,371 கடைகளுக்கு ரூ.3 ஆயிரம் என மொத்தம் 4,048 கடைகளுக்கு பராமரிப்பு தொகை வழங்கப்படுகிறது. இந்த தொகையைக் கொண்டு கடை, கவுண்டர், சுற்றுப்புறம் சுத்தம் செய்ய துடைப்பம், கிருமிநாசினி, பினாயில், குப்பை தொட்டி, பைகள் வாங்குதல், சுத்தம் செய்ய உள்ளூரில் ஒருவரை தினக்கூலி அடிப்படையில் நியமித்தல், வாட்டர் கேன் வாங்குதல், வாட்டர் டிஸ்பென்சர் / பானை வாடகை / பராமரிப்பு, குடிநீர் செலவிடுதல், பணியாளர்கள் மற்றும் நுகர்வோருக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல் போன்றவற்றிற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்