தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ளது. திமுக மற்றும் அதன் கூட்டணி சார்பில் தொகுதி பங்கீடுகள் அனைத்தும் நிறைவடைந்து வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டு வருகின்றனர். காங்கிரஸ் கட்சியும் விரைவில் தங்களது வேட்பாளர்களை அறிவிக்க உள்ளது. திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் மகனும், மதிமுக முதன்மை செயலாளருமான துரை வைகோ, பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் திமுக முதன்மை செயலாளரும், நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கே.என்.நேருவின் மகன் அருண் நேருவும் களம் காண்கின்றனர்.
இந்த நிலையில் திருச்சி மற்றும் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து வருகிற 22ம் தேதி மாலை திருச்சி மாவட்டம் சிறுகனூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளார். இதற்காக அங்கு பிரம்மாண்ட பொது கூட்ட மேடை அமைக்கப்பட உள்ளது. அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதற்கான ஏற்பாடுகளை அமைச்சர் கே.என்.நேரு நேரில் பார்வையிட்டு தகுந்த ஆலோசனை வழங்கினார். அப்போது, மத்திய மாவட்ட திமுக செயலாளர் வைரமணி, மாநகர செயலாளர் மற்றும் மாநகராட்சி மேயர் அன்பழகன், மதிமுக மாநகர மாவட்ட செயலாளர் வெல்லமண்டி சோமு, காங்கிரஸ் வடக்கு மாவட்ட தலைவர் கலை உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் கே.என்.நேரு, நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரையை திருச்சியில் இருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்குகிறார். இதற்காக சிறுகனூரில் பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டு வருகிறது. தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். திருச்சியில் தொடங்கும் நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரச்சார கூட்டம் மாபெரும் வெற்றிக்கான அறிகுறியாக இருக்கும் என தெரிவித்தார்.
2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக திருச்சி மாவட்டம் சிறுகனூரில் மாபெரும் பொதுக்கூட்டம் நடந்தது. அப்போது நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. அதேபோல, வருகிற நாடாளுமன்ற தேர்தலுக்கும் சிறுகனூரில் மிகப்பெரிய பொதுக்கூட்டத்தை ஏற்பாடு செய்து அங்கிருந்து தேர்தல் பிரச்சாரத்தை தி.மு.க தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.