Rock Fort Times
Online News

தனுஷ் அரசியலுக்கு வந்தால் அவருக்கும்,விஜய்க்கும் வருங்காலத்தில் போட்டியி ருக்கும்… பிரபல ஜோதிடர் கணிப்பு..!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது படங்கள் நல்ல வசூலையும் ஈட்டி வருகின்றன. இவரது இரு படங்களுக்கு மத்திய அரசு விருதும் கிடைத்துள்ளது. ‘கேப்டன் மில்லர்’ படத்தில் சிறப்பாக நடித்தமைக்காக சிறந்த நடிகருக்கான விருதும் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் தனது ரசிகர் மன்றம் மூலமாக ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கி வருகிறார். அண்மையில் தனது ரசிகர் மன்ற கொடியினையும் அறிமுகப்படுத்தினார். இதனால், விஜயை போல தனுசும் அரசியலில் கால் பதிக்க உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. இதனை மெய்ப்பிக்கும் வகையில் இன்றைய தினம்( ஆகஸ்ட் 10) நடிகர் தனுஷ் தனது ரசிகர் மன்ற உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்துமாறு நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். கோவை மாவட்ட ரசிகர் மன்றத்தை தொகுதி வாரியாக பிரித்து நடிகர் தனுஷ் நற்பணி மன்றம் தொடங்கப்பட்டுள்ளது. கோவை வடக்கு, கவுண்டம்பாளையம், சிங்காநல்லூர், சூலூர், மேட்டுப்பாளையம் ஆகிய 5 சட்டமன்ற தொகுதிகளில் தனுஷ் ரசிகர்கள் நற்பணி மன்றம் தொடங்கப்படவுள்ளது. 5 தொகுதிகளிலும் உறுப்பினர் சேர்க்கைக்கு கோவை மாவட்ட தலைவர் சங்கரை தொடர்புகொள்ளுமாறு நடிகர் தனுஷ் கேட்டுக்கொண்டுள்ளார். தமிழ்நாடு முழுவதும் 40க்கும் மேற்பட்ட மாவட்டங்களாக பிரித்து ரசிகர் மன்ற மாவட்டதலைவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இதுகுறித்து முதல்வர் விஜயின் ஆஸ்தான ஜோதிடர் ரத்தன் பண்டிட் நிகழ்ச்சி ஒன்றில் கூறுகையில், முன்னாள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வெற்றி யோகம் இல்லை. அவருடைய அரசியல் பயணம் ஓய்வை நோக்கி செல்லும். விஜய் அரசியலுக்கு வரவில்லை என்றால் உதயநிதி ஸ்டாலினுக்கு முதல் – அமைச்சராகும் வாய்ப்பு இருந்திருக்கும். ஆனால் தற்போதைய சூழலில் அவருக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவியே அமையும். அண்ணாமலைக்கு தமிழக அரசியலில் முதல்-அமைச்சர் யோகம் இல்லை. இனி தமிழக அரசியலில் முக்கிய சக்தியாக இருப்பவர் முதல்- அமைச்சர் விஜய் தான். எதிர்காலத்தில் நடிகர் தனுஷ் அரசியலுக்கு வருவதற்கான யோகம் இருக்கிறது. அரசியல் களத்தில் அடியெடுத்து வைக்கும் காலம் வந்தால் தமிழக அரசியலில் விஜய்க்கும், அவருக்கும் போட்டி உருவாகும். தனுசின் அரசியல் வருகைக்கு பிறகே தமிழக அரசியல் புதிய கட்டத்தை நோக்கி செல்லும். இவ்வாறு அவர் கூறினார். ஜோதிடர் ரத்தன் பண்டிட் பகிர்ந்த கருத்துக்கள் சமூக வலை தளங்களில் பரபரப்பான விவாதங்களை ஏற்படுத்தி வருகிறது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்