Rock Fort Times
Online News

ஓடும் ரெயிலில் செல்போன் திருடும் கும்பல் திருச்சி சிலை கடத்தல் தடுப்பு பிரிவு தலைமை காவலர் மீது தாக்குதல்…!

நெடுந்தூரம் செல்பவர்கள் பஸ் பயணத்தை விட ரயில் பயணத்தையே அதிகம் விரும்புகின்றனர். அதுவும் ஜன்னல் ஓரம் அமர்ந்து இயற்கையை ரசித்தபடியே செல்வது தனி சுகம் தான். கூட்ட நெரிசல் காரணமாக சிலர் படிக்கட்டுகள் அருகே அமர்ந்து செல்வதும் உண்டு. அவ்வாறு அமர்ந்து செல்பவர்கள் தங்களது செல்போன்களை பார்த்தபடியே செல்கின்றனர்.  இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டுள்ள  ஒரு கும்பல் ரயில் பயணிகளிடம் செல்போனை பறித்துக் கொண்டு ஓடி விடுகின்றனர். இதனால், சிலர் தங்களது விலை உயர்ந்த செல்போன்களை பறி கொடுப்பதுடன் அதிலுள்ள முக்கிய ஆவணங்களையும் இழந்து தவிக்கின்றனர்.  இதனை தடுக்க ரெயில்வே காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் அவற்றை முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லை.  இந்தநிலையில் சென்னையில் இருந்து திருச்சி நோக்கி வந்து கொண்டிருந்த ரயிலில் திருச்சி மாவட்ட சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் பணிபுரியும் முதல்நிலை காவலர் சுதாகர் என்பவர் பயணம் மேற்கொண்டு உள்ளார். அந்த ரயில்  விழுப்புரத்தை நெருங்கிய போது மிதமான வேகத்தில் சென்று  கொண்டிருந்தது. அப்போது  தலைமை காவலர் சுதாகர் ரயில் படிக்கட்டு அருகே நின்று கொண்டு  மனைவியிடம் செல்போனில் பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் அவரை கல்லால் தாக்கி செல்போனை பறிக்க முயன்றுள்ளனர்.  ஆனால், அவர் செல்போனை இறுக பிடித்துக் கொண்டதால் தப்பியது. இருந்தாலும் மர்ம நபர்கள் தாக்கியதில் அவருக்கு கண்ணில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அந்த ரயில் நிறுத்தப்பட்டு ரெயில்வே காவலர்கள் அவரை ஆம்புலன்ஸ் மூலம் விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து திருச்சி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் கண் முழுவதும் சேதமடைந்துள்ளதால் திருச்சி அரசு மருத்துவமனையில் இருந்து மதுரை அரவிந்த் கண் சிறப்பு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  அங்கு அவருக்கு கண் மருத்துவர்கள் சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் அறுவை சிகிச்சை மூலம் ஒரு கண் அகற்றப்பட்டது. இதுகுறித்து அந்த காவலரின் மனைவி விழுப்புரம் ரெயில்வே காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.  அந்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிந்து இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.  ரயில் பயணங்களின் போது ஜன்னல் ஓரம் மற்றும் படிக்கட்டு அருகே அமர்ந்து செல்லும் பயணிகளை கல்லால் தாக்கி செல்போன்களை பறிக்கும் சம்பவம் அடிக்கடி அரங்கேறி வருகிறது. இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்பதே ரயில் பயணிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது .

Error 403 The request cannot be completed because you have exceeded your quota. : quotaExceeded

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்