பா.ஜ.க. தேசிய பொது செயலாளர் பதவியில் இருந்து, தமிழக பா.ஜ.க. பொறுப்பாளர் சி.டி.ரவி அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். அண்ணாமலையின் நடைபயணத்தில் பங்கேற்றுள்ள நிலையில் அவரது பதவி பறிக்கப்பட்டுள்ளது. இவர் அண்மையில் நடைபெற்ற கர்நாடக, சட்டசபை தேர்தலில் சிக்கமகளூரு தொகுதியில் 5-வது முறையாக களமிறங்கினார். அவரை எதிர்த்து 17 ஆண்டுகளாக அவரது நண்பராக இருந்த எச்.டி.தம்மையா, காங்கிரஸ் சார்பில் களமிறக்கப்பட்டார்.
இறுதியில் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெற்றார். சி.டி.ரவி தோல்வி அடைந்தார். சிக்கமகளூரு மாவட்டத்தில் உள்ள 5 தொகுதிகளையும் காங்கிரஸ் கைப்பற்றியது. தற்போது சி.டி.ரவி அண்ணாமலையின் நடைபயணத்தில் கலந்து கொண்டுள்ளார். நடைபயணத்தில் இருக்கும் போதே அவரின் தேசிய பொது செயலாளர் பதவியை பறித்து கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஒரு அறிவிப்பில், தேசிய நிர்வாக குழு மாற்றியமைக்கப்பட்டுள்ளது. 13 துணை தலைவர்கள், 9 பொது செயலாளர்கள் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் தேசிய பொது செயலாளராக இருந்த சி.டி.ரவி, திலிப் சாஹியா ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். காங்கிரசில் இருந்து பா.ஜ.க.வில் சேர்ந்த அனில் ஆண்டனிக்கு தேசிய செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தலை சந்திக்கும் வகையில் இந்த அதிரடி மாற்றத்தை பா.ஜ.க மேலிடம் பிறப்பித்துள்ளது. அதே நேரத்தில் சி.டி.ரவி தமிழக பாஜக பொறுப்பாளர் பதவியில் தொடர்வாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.