Rock Fort Times
Online News

விபத்து வழக்குகளை விரைவாக விசாரிக்க திருச்சியில் 2-வது நீதிமன்றம் திறப்பு…! 

மோட்டார் வாகன  விபத்து வழக்குகளை விசாரிக்க  திருச்சியில் ஏற்கனவே ஒரு நீதிமன்றம்  செயல்பட்டு வருகிறது. இந்த வழக்குகளை விரைவாக விசாாிக்க தற்போது 2-வது சிறப்பு  நீதிமன்றம் ஏற்படுத்தப்பட்டது. இதன் திறப்பு விழா இன்று ( 29.07.2023 ) நடந்தது. இதற்கான விழாவில் , சென்னை ஐகோர்ட்  நீதிபதி நிர்மல்குமார் கலந்து கொண்டு நீதிமன்றத்தை திறந்து  வைத்தார். விழாவில் அமைச்சர்கள் கே. என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, திருச்சி மாவட்ட முதன்மை நீதிபதி பாபு, மாவட்ட கலெக்டர் மா.பிரதீப்குமார் ஐஏஎஸ் ,  மாநகராட்சி மேயர் அன்பழகன், திருச்சி மாநகர காவல் ஆணையா் எம்.சத்யபிாியா ஐபிஎஸ் மற்றும் திருச்சி வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள், வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.

விழாவில் அமைச்சா் கே.என்.நேரு பேசும்போது :

1996ல் நான்காவது முறையாக முதலமைச்சராக கருணாநிதி பதவி ஏற்ற போது நீதியரசர்கள் கேட்டுக்கொண்டதன் படி ரூ.350 கோடியில் சென்னை உயர் நீதிமன்றத்தின் அடிப்படை கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டன. அதைத்தொடர்ந்து வந்த திமுக ஆட்சியிலும் நீதிமன்றங்களுக்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டன. திருச்சியில் வழக்கறிஞர்களுக்கு ஒரு சேம்பர் வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அது இந்த ஆண்டிலேயே நிறைவேற்றி தரப்படும். அதேபோன்று 138 ஆண்டுகள் பழமையான திருச்சி நீதிமன்ற கட்டிடங்களை பழமை மாறாமல் புதுப்பிப்பதற்கும் சாலை அமைத்து தருவதற்கும் இந்த ஆண்டிலேயே நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது தொட்டியத்தில் புதிய நீதிமன்றம் கட்டுவதற்கு மாவட்ட நிர்வாகம் மூலம் கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. மேலும், லால்குடி மற்றும் ஸ்ரீரங்கத்தில் அமைக்கப்பட உள்ள நீதிமன்றங்களுக்கு தேவையான நிலத்தை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசும்போது :

தமிழகத்தில் இன்றைக்கு 3 கோடிக்கும் மேற்பட்ட வாகனங்கள் உள்ளன. அதில் இரு சக்கர வாகனங்கள் அதிகம் இருக்கின்றன. பொதுவாக விபத்துகளுக்கு அதிவேகம் காரணம் என்று கூறப்பட்டாலும் அதனை ஓட்டுகின்ற ஓட்டுநர்களின் மனநிலையும் காரணமாக இருக்கிறது. ஆகவே, வாகனத்தை இயக்குபவர்கள் பொறுப்பாக இயக்க வேண்டும். விபத்துகளால் பாதிக்கப்படும் குடும்பத்தினருக்கு நீதி,  தாமதம் இல்லாமல் கிடைக்க வேண்டும் என்பதற்காக இது போன்ற நீதிமன்றங்கள் திறக்கப்படுகின்றன. விபத்துகளில் படுகாயம் அடைபவர்களை கண்டும் காணாமல் செல்வதை தடுப்பதற்காக விபத்தில் படுகாயம் அடைந்தவர்களை உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கும் நபர்களுக்கு ரூ. 5000 வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்தார். அதன்படி இன்றைக்கு பல லட்சம் பேர் காப்பாற்றப்பட்டுள்ளதாக கூறினார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்