ரூ.100 கோடி லஞ்சம் வாங்கியதாக வழக்கு: திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் முன்ஜாமீன் மனு தள்ளுபடி…!
கடந்த திமுக ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக பொறுப்பு வகித்தவர் அன்பில் மகேஷ். தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கும் விவகாரத்தில் ரூ.100 கோடி லஞ்சம் பெற்றதாக இவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீசார், அன்பில் மகேஷ், தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி. அரசகுமார் உள்ளிட்டோருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்தனர். அவர்களில் அரசகுமார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் தனக்கு முன்ஜாமீன் வழங்கக் கோரி, அன்பில் மகேஷ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதி வி.லட்சுமிநாராயணன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அன்பில் மகேஷ் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் பி.வில்சன், இந்த வழக்கில் திருச்சி, சென்னையில் மனுதாரருக்குச் சொந்தமான இடங்களில் சோதனை நடத்தியுள்ளனர். சோதனைக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கப்பட்டது. மனுதாரர் எங்கும் தப்பிச் செல்லவோ, சாட்சிகளை கலைக்கவோ மாட்டார். அவர் எப்போது வேண்டுமானாலும், போலீசார் விசாரணைக்கு ஆஜராக தயாராக உள்ளார். எனவே, அவரை கைது செய்ய வேண்டிய அவசியம் இல்லை. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட மூவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக வாதிட்டார். போலீஸ் தரப்பில் மாநில தலைமை குற்றவியல் வழக்குரைஞர் ஜான் சத்யன், இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான முத்துகுமார் தலைமறைவாக உள்ளார். வழக்கில் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தீவிரமானவை. இந்த விவகாரத்தில் ரூ.400 கோடி வரை வசூலிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. எனவே, மனுதாரருக்கு முன்ஜாமீன் வழங்கினால், அந்த தகவல்கள் எதுவும் வெளியே வராது. மனுதாரரை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டியது அவசியம். மேலும், முத்துகுமாரை மனுதாரர்தான் பாதுகாக்கிறார். பணப்பரிமாற்றம் குறித்து விசாரிக்க வேண்டியுள்ளது, எனவே, முன்ஜாமீன் வழங்கக் கூடாது என வாதிடப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, விசாரணை ஆரம்பக்கட்டத்தில் இருக்கிறது என்ற காவல்துறை தரப்பு வாதத்தை ஏற்று அன்பில் மகேஸுக்கு முன்ஜாமீன் வழங்க மறுத்து, அவரது மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Comments are closed.