Rock Fort Times
Online News

துவரங்குறிச்சி அருகே நள்ளிரவில் ஏற்பட்ட பயங்கர விபத்து… * நேரில் சென்று நேசக்கரம் நீட்டிய மணப்பாறை எம்.எல்.ஏ. கதிரவனுக்கு குவியும் பாராட்டு!

திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சி அருகே இன்று (அக்டோபர் -26) அதிகாலை சுமார் 1.30 மணியளவில் வலசுப்பட்டி எனும் இடத்தில் ஈச்சர் வாகனத்தின் பின்னால் சொகுசு பஸ் மோதி விபத்துக்குள்ளானது. இதில் தனியார் பேருந்தின் கிளீனர் சம்பவ இடத்திலேயே பலியானார். சுமார் 40க்கும் மேற்பட்ட பயணிகள் காயம் அடைந்தனர். நள்ளிரவு நேரத்தில் ஏற்பட்ட திடீர் விபத்து அப்பகுதியையே மிகவும் பரபரப்பாக மாற்றி இருந்தது. அருகில் இருந்த பொதுமக்கள் உள்ளிட்ட பலர், விபத்தில் சிக்கிய பயணிகளை மீட்டு ஆம்புலன்ஸில் அனுப்பி வைத்தனர். இந்நிலையில், விபத்து குறித்து தகவல் அறிந்த மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் ஆர்.கதிரவன் உடனடியாக சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டதோடு காயமடைந்த பயணிகள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த மணப்பாறை அரசு தலைமை மருத்துவமனைக்கும் நேரில் சென்று அவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை செய்ய மருத்துவர்களுக்கு உத்தரவிட்டார். மணப்பாறை எம்.எல்.ஏ கதிரவனின் இந்த மனிதாபிமான செயலை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்