அறுவை சிகிச்சையின்போது பெண்ணின் வயிற்றில் துணியை வைத்து தைத்ததாக வழக்கு: திருச்சியில் உள்ள பிரபல மருத்துவமனைக்கு ரூ.25 லட்சம் அபராதம்…!
திருச்சி மாவட்டம், மணப்பாறையை சேர்ந்த இளம் பெண் ஒருவர் வயிற்று வலி காரணமாக திருச்சி உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கடந்த 2016 மார்ச் 15-ம் தேதி சென்றார். அங்கு, அவருக்கு கருப்பையில் நீர்க் கட்டி இருப்பதாகக் கூறி, மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மேற்கொண்டனர். பிறகு, வீட்டுக்குச் சென்ற அந்தப் பெண்ணுக்கு தொடர்ந்து வயிற்று வலி இருந்ததால், மற்றொரு தனியார் மருத்துவமனைக்கு சென்றார். அந்த மருத்துவமனையில் அவருக்கு ஸ்கேன் உள்ளிட்ட பரிசோதனைகள் எடுத்து பார்க்கப்பட்டன. இதில், அவரது கருப்பை அகற்றப்பட்டதும், வயிற்றில் மருத்துவத் துணி இருப்பதும் தெரிய வந்தது. இதையடுத்து, தனது அனுமதியின்றி கருப்பையை அகற்றியதுடன், வயிற்றில் மருத்துவத் துணியை வைத்துத் தைத்த தனியார் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், தனக்கு இழப்பீடு வழங்கக் கோரியும் அந்தப் பெண் மதுரையில் உள்ள மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் மனு தாக்கல் செய்தார். எஸ். கருப்பையா தலைமையிலான ஆணையத்தின் விசாரணை நிறைவில், தவறான அறுவைச் சிகிச்சை மேற்கொண்ட திருச்சியை சேர்ந்த தனியார் மருத்துவமனைக்கு ரூ. 25 லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
Comments are closed.