Rock Fort Times
Online News

இடைத்தேர்தல் நடைபெறும் இரு தொகுதிகளிலும் நாளை மாலை பிரச்சாரம் ஓய்கிறது…* தாராபுரத்தில் இறுதிகட்ட ஓட்டு வேட்டையாடுகிறார் முதல்வர் விஜய்..!

தமிழகத்தில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் வருகிற ஆறாம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த தொகுதிகளில் த.வெ.க., திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சிகள் என
ஐந்து முனை போட்டி நிலவுகிறது. கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் இந்த தொகுதிகளில் கட்சியின் தலைவர்கள் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளனர்.
முதல்வர் விஜய் இறுதி கட்டமாக நாளை(அக்டோபர் 4) தாராபுரம் தொகுதியில் ரோடு ஷோ நடத்துகிறார். இந்தநிலையில் நாளை மாலையுடன் இந்த இரு தொகுதிகளிலும் தேர்தல் பிரச்சாரம் ஓய்கிறது.
இதனால் , இந்த தொகுதிகளில் கடும் கட்டுப்பாடுகள் அமலுக்கு வரவுள்ளன.

இதுகுறித்து தமிழக தேர்தல் ஆணையர் அர்ச்சனா பட்நாயக் வெளியிட்ட செய்தி குறிப்பில், “மதுராந்தகம் (தனி) மற்றும் தாராபுரம் (தனி) சட்டமன்றத் தொகுதிகளின் இடைத் தேர்தல்களுக்கான வாக்குப்பதிவு 6-ம் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு நாளை (அக்.4) மாலை 6 மணி முதல் வாக்குப்பதிவு முடிவடையும் வரையில் தேர்தல் கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும். எனவே தேர்தல் தொடர்பான பொதுக்கூட்டத்தை யாரும் ஒருங்கிணைக்கவோ, நடத்தவோ, அவற்றில் பங்கேற்கவோ கூடாது. அதேபோல, எந்தக் கட்சியை சேர்ந்த தேர்தல் பிரச்சாரமும் திரைப்படம், தொலைக்காட்சி, எஃப்.எம். ரேடியோ, வாட்ஸ்அப், முகநூல், டிவிட்டர் உள்ளிட்ட எந்த சாதனங்களிலும் வெளியாகக் கூடாது. பொதுமக்களை ஈர்க்கும் வகையில் எந்தவொரு இசை நிகழ்ச்சி உள்ளிட்ட பொழுதுபோக்கு நிகழ்ச்சியையும் எந்த அரசியல் கட்சிகளும் நடத்தக் கூடாது. இவற்றில் ஏதேனும் ஒரு விதிமுறை மீறப்பட்டாலும் 1951-ம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்பிரிவு 126 (2)-ன்படி, 2 ஆண்டுகள் சிறை அல்லது அபராதம் அல்லது இவையிரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும். அதேபோல், அனைத்து அரசியல் கட்சி நிர்வாகிகள், கட்சிப் பணியாளர்கள், வாக்காளர்கள் அல்லாதோர் நாளை மாலை 6 மணிக்குள் தொகுதிகளில் இருந்து வெளியேற வேண்டும். வேட்பாளர்களுக்கு வழங்கப்பட்ட நட்சத்திர பேச்சாளர்கள் உட்பட வாகன அனுமதிகள் நாளை மாலை 6 மணி முதல் செல்லாததாகி விடும். சட்டமன்றத் தேர்தலுக்கான ஒவ்வொரு வேட்பாளருக்கும் வாக்குப்பதிவு நாளன்று, அவரது சொந்த பயன்பாட்டிற்காக ஒரு வாகனம், தேர்தல் முகவரின் பயன்பாட்டிற்காக ஒரு வாகனம், தேர்தல் முகவர் அல்லது அவரது பணியாளர்கள் பயன்பாட்டிற்கான ஒரு வாகனம் வழங்கப்படும். வாக்காளர்களை வாக்குச்சாவடிக்கு அழைத்து வருவதற்கும், வாக்குச் சாவடிகளிலிருந்து அழைத்துச் செல்வதற்கும் வேட்பாளர் அல்லது அவரது முகவர், எந்தவொரு வாகனத்தை வாடகைக்கு எடுப்பதற்கோ அல்லது வாங்குவதற்கோ அனுமதி கிடையாது” என்று அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்