த.வெ.க. பெண் வேட்பாளரை உருவ கேலி செய்த மு.க.ஸ்டாலின் மீது நடவடிக்கை… தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா புகார்..!
தமிழகத்தில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு சட்டமன்ற தொகுதிகளில் வருகிற 6-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்தநிலையில் நேற்றையதினம் தாராபுரம் திமுக வேட்பாளரை ஆதரித்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார். அப்போது அவர், அதிமுகவில் இருந்து தவெகவிற்கு மாறிய சத்யபாமா
ஒரு பெட்டி பாமா, பல்டி பாமா, இந்த உருவத்தை வைத்துக்கொண்டு அவர் எப்படி பல்டி அடித்தார் என்று தான் தெரியவில்லை என்று பேசினார். அவரது இந்த பேச்சு கடும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. முதல்வர் விஜய் மற்றும் அமைச்சர்கள், அரசியல் கட்சித்
தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்கை நேரில் சந்தித்த தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அவரிடம் புகார் மனுவை அளித்தார். அதில், தவெக வேட்பாளர் சத்தியபாமாவை உருவக்கேலி செய்யும் வகையில் கொச்சை வார்த்தைகளை பயன்படுத்திய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். நன்னடத்தை விதிகளை மீறியதற்காக மு.க.ஸ்டாலின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் மற்றும் அவரது தேர்தல் பிரசாரங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என்று அந்த மனுவில் கேட்டுக்கொள்ளப்பட்டு இருந்தது.
பின்னர் அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறுகையில், திமுக தலைவர்கள் தொடர்ச்சியாக பெண்களை மையப்படுத்தி, உடல் சார்ந்த இழிசொற்களையும், கொச்சையான வார்த்தைகளையும் பயன்படுத்தி வருகின்றனர். உதயநிதி உள்ளிட்ட திமுக தலைவர்கள் பெண்கள் குறித்து அவதூறாகப் பேசுவதை இன்னும் நிறுத்தவில்லை. மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவையும் திமுகவினர் இதேபோன்றுதான் உருவக்கேலி செய்தனர். ஆணாதிக்க சிந்தனை கொண்ட தலைவர்கள் அதிகம் நிறைந்துள்ள திமுக, பெண்களை இழிவுபடுத்துவதை உடனடியாக நிறுத்த வேண்டும். தவெக வேட்பாளர் சத்யபாமாவிடம் மு.க.ஸ்டாலின் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையெனில், அவர் மீது விரைவில் கிரிமினல் வழக்குகளும் சட்டரீதியான கடுமையான நடவடிக்கைகளும் தொடரப்படும் என்று தெரிவித்தார்.

Comments are closed.