Rock Fort Times
Online News

பா.ஜ.க.வின் ஆணவ பேச்சு தான் அவர்களை வீழ்த்தப் போகிறது-முதல்வர் மு.க. ஸ்டாலின்…!

தமிழகத்தில் ஏப்ரல் 19-ம் தேதி 39 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதற்காக தேர்தல் கூட்டணியை இறுதி செய்து வேட்பாளர் பட்டியலையும் அறிவித்துவிட்டு தேர்தல் பிரச்சாரத்தையும் திமுக தொடங்கி விட்டது. இதற்கான முதல் பிரச்சார பொதுக்கூட்டம் திருச்சி சிறுகனூரில் நேற்று(22-03-2024) நடைபெற்றது. கூட்டத்தில் திமுக தலைவரும், முதல்- அமைச்சருமான மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் திருச்சி நாடாளுமன்ற தொகுதி மதிமுக வேட்பாளர் துரை வைகோ, பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் அருண் நேரு ஆகியோரை அறிமுகம் செய்து வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

டெல்லி செங்கோட்டையை யார் கைப்பற்ற வேண்டும் என்று தீர்மானிக்க இந்த மலைக்கோட்டை மாநகரில் கடல்போல் திரண்டிருக்கும் தமிழ்ச் சொந்தங்களே! திருச்சி என்றாலே திருப்புமுனை! இப்போது இந்தியாவுக்கே திருப்புமுனை ஏற்படுத்த நாம் திரண்டிருக்கிறோம்! பல திருப்புமுனைகளை தமிழ்நாட்டுக்கு கொடுத்து, தமிழினத்தின் முன்னேற்றத்துக்காக தன்னுடைய வாழ்நாளெல்லாம் உழைத்த தமிழினத் தலைவர் கலைஞரின் நூற்றாண்டுப் பரிசாக, ஒரு மகத்தான வெற்றியை கொடுப்பதற்கான துவக்கமாக இங்கு திரண்டிருக்கிறோம். வெற்றி என்றால் எப்படிப்பட்ட வெற்றி? நாற்பதுக்கு, நாற்பது. நாம் எழுதப்போகும் புதிய வரலாற்றுக்கு முன், தந்தை பெரியாரையும் – பேரறிஞர் அண்ணாவையும் – தலைவர் கலைஞரையும் வணங்கி, இந்தப் பயணத்தைத் தொடங்குகிறேன். மாநாடுபோல இந்த கூட்டத்தை ஏற்பாடு செய்திருக்கிறார் முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு. எல்லாவற்றுக்கும் தொடக்கமாக இருப்பது இந்தத் திருச்சிதான்! திராவிட முன்னேற்றக் கழகம் தேர்தலில் நிற்க வேண்டும் என்று 1956-ஆம் ஆண்டு முடிவெடுக்கப்பட்டது திருச்சி மாநாட்டில்தான். திருச்சி பாதை எப்போதுமே வெற்றிப் பாதை. அதன் அடையாளமாகத்தான் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு 6 முறை ஆட்சிப் பொறுப்பை வழங்கியிருக்கிறார்கள் தமிழ்நாட்டு மக்கள்.
கடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு, ‘தமிழ்நாட்டின் விடியலுக்கான முழக்கம்’ என்ற எழுச்சிமிகு கூட்டத்தை ஏற்பாடு செய்து, இங்கு அழைத்து வந்தார் ஆருயிர் சகோதரர் கே.என்.நேரு. அதுதான் தமிழ்நாட்டில் அ.தி.மு.க. ஆட்சியை வீழ்த்தி கோட்டையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சியை அமர வைத்தது.
பாசிச பா.ஜ.க.வை வீழ்த்தி, இந்தியா கூட்டணியின் ஆட்சியை மத்தியில் ஏற்படுத்துவதற்காக நடப்பதுதான், இந்த நாடாளுமன்றத் தேர்தல். தேர்தல் என்பதால் பிரதமர், இப்போது இந்தியாவில் இருக்கிறார். அதனால் அடிக்கடி தமிழ்நாட்டுக்கு வருகிறார். இல்லை என்றால், பெரும்பாலும் வெளிநாட்டில்தான் இருப்பார். சமீபத்தில் சேலத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, “தமிழ்நாட்டில் அவருக்கு செல்வாக்கு அதிகமாகிவிட்டதால், தி.மு.க.வினருக்குத் தூக்கம் வரவில்லை” என்று பேசியிருக்கிறார். உண்மையில், தன்னோட ஆட்சி முடியபோகிறது என்று, பிரதமர் மோடிக்குத்தான் தூக்கம் வரவில்லை! அவருக்கு ஏற்பட்டிருக்கும் தோல்வி பயம், அவரின் முகத்திலும், கண்ணிலும் நன்றாகத் தெரிகிறது.

 

சரி, தமிழ்நாட்டுக்கு இத்தனை முறை வந்தாரே, அவரிடம் நான் ஒரே ஒரு கேள்விதான் கேட்டேன். அதுக்கு ஒருமுறையாவது பதில் சொன்னாரா?. வாரா வாரம் வந்தாலும் அவர் பதில் சொல்லவில்லை. இனி வந்தாலும், சொல்லவும் முடியாது! பத்தாண்டு காலம் ஆட்சி செய்த ஒரு பிரதமரால், தமிழ்நாட்டுக்குச் செய்த சிறப்புத் திட்டம் என்று ஒன்றே ஒன்றை சொல்ல முடியுமா?. இவர் நம்மை விமர்சிக்கிறார். இப்போது நான் சொல்கிறேன், நம்முடைய திராவிட மாடல் ஆட்சியில் மூன்று ஆண்டுகளாக, மக்களாகிய உங்களுக்காகச் செய்த சாதனைகளின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. சொல்ல வேண்டும் என்று சொன்னால் இன்றைக்கு ஒரு நாள் போதாது. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் மாநிலம் முழுவதும் ஒரு கோடியே 15 லட்சம் குடும்ப பெண்களுக்கு மகளிர் உரிமைத்தொகை மாதந்தோறும் ரூபாய் 1000, நகர பஸ்களில் விலையில்லா பயண திட்டத்தின் கீழ் இதுவரை மகளிர் மட்டும் 445 கோடி முறை பயணம் செய்து இருக்கிறார்கள். கல்லூரி மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் மாநிலம் முழுவதும் 4 லட்சத்து 81 ஆயிரத்து 75 மாணவிகள் பயனடைகிறார்கள்.
தமிழ்நாடு முழுவதும் 16 இலட்சம் குழந்தைகள் காலை உணவுத் திட்டத்தில் சாப்பிடுகிறார்கள். இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் இதுவரை 24 இலட்சத்து 86 ஆயிரம் மாணவர்கள் பயனடைந்து இருக்கிறார்கள். 28 இலட்சம் இளைஞர்கள் நான் முதல்வன் திட்டத்தில் பலன் அடைந்திருக்கிறார்கள்! அடுத்தது, மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் ஒரு கோடி பேர் பயனடைந்திருக்கிறார்கள். மக்களுடன் முதல்வர் திட்டத்தினால் 35 ஆண்டுகளாக முடியாத பட்டா மாற்றம், மூன்றே நாட்களில் முடிந்துவிட்டது என்று பயனாளி ஒருவர் நன்றி தெரிவித்தார். இப்படி தமிழ்நாட்டில் இருக்கின்ற, அனைத்துக் குடும்பத்திற்கும் பார்த்து பார்த்து அவர்களின் குடும்பத்தில் ஒருவனாக பல திட்டங்களைத் தீட்டி தருபவன்தான், இன்று உங்கள் முன்னால் கம்பீரமாக நின்று கொண்டிருக்கும் இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்! மாநிலத்தை ஆளும் நாங்கள்தான், முடியாத நிதி நெருக்கடியிலும், இவ்வளவு செய்திருக்கிறோமே, நீங்கள் என்ன என்ன சிறப்புத் திட்டங்களை தமிழ்நாட்டிற்கு செய்திருக்கிறீர்கள் என்று பிரதமரிடம் கேட்டால் – சென்னை – தூத்துக்குடி வெள்ளப் பாதிப்புக்கு ஏன் நிதி தரவில்லை என்று பிரதமரிடம் கேட்டால் – எய்ம்ஸ் மருத்துவமனையை ஏன் கட்டவில்லை என்று கேட்டால் – புதிய இரயில்வே திட்டங்கள் எங்கே என்று கேட்டால் – இங்கு இருக்கின்ற மத்திய அரசு பணிகளில் ஏன் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு முன்னுரிமை அளிப்பதில்லை என்று கேட்டால் – எதற்காவது அவரிடம் பதில் இருக்கிறதா?நலத்திட்டங்கள் மட்டுமல்ல, இந்த மாவட்டங்களுக்கு என்று செய்த – செய்து கொண்டிருக்கின்ற – வளர்ச்சித் திட்டங்களையும் சொல்லவா? சிலவற்றை மட்டும் சொல்கிறேன்! 350 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருச்சியில் ஒரு மிகப்பெரிய பேருந்து முனையம் மற்றும் கனரக வாகன சரக்கு மையம் அமைக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 142 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மணப்பாறையில் உணவுப் பூங்கா, நவல்பட்டில் தகவல் தொழில்நுட்ப மையம், பஞ்சப்பூரில் 410 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மினி டைடல் பார்க், 110 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருச்சியில் மகாத்மா காந்தி நினைவு அரசினர் மருத்துவமனைக்குப் புதிய கட்டடங்கள் ஆகிய பணிகள் வேகமாக நடைப்பெற்றுக் கொண்டிருக்கிறது.

இன்னும் பல திட்டங்கள் குறிப்பாக, திருச்சியில் இளைஞர்களுக்காக உலகத்தரத்தில் ஒரு ஒலிம்பிக் அகாடமி, புதுக்கோட்டையில் புதிய பேருந்து நிலையம், 40 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கரூர் பேருந்து நிலையக் கட்டுமானப் பணிகள் – என்று பட்டியல் நீளமாக இருக்கிறது!
அடுத்து, தேர்தல் அறிக்கை பற்றியும் கூறவேண்டும். கடந்த பத்தாண்டுகளாக பா.ஜ.க. அரசு இஷ்டத்திற்கு ஏற்றிய பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் சிலிண்டர் விலை குறைக்கப்படும். தமிழ்நாட்டு ஏழை-எளிய மாணவர்களின் உயிரை பழிவாங்கும் நீட் தேர்வு ஒழிக்கப்படும். மாநிலங்களுடைய உயிர்மூச்சாக இருக்கின்ற நிதி உரிமைக்கு வேட்டு வைக்கும், தற்போதைய ஜி.எஸ்.டி முறை சீர்திருத்தம் செய்யப்படும்.
சிறுபான்மையின மக்களுக்கு எதிரான சட்டங்கள் ரத்து செய்யப்படும். ஒரே நாடு – ஒரே தேர்தல் என்ற பேரில் ஜனநாயகத்துக்குச் சவக்குழி தோண்டும் முயற்சி நிறுத்தப்படும். உலகப் பொதுமறையான திருக்குறள், தேசிய நூலாக அறிவிக்கப்படும். மத்திய அரசுப் பணித் தேர்வுகள், மத்திய அலுவலகங்களில் தமிழ் மொழியில் பயின்ற நமது இளைஞர்களுக்கு இடம் உறுதி செய்யப்படும்.

அதுமட்டுமல்ல, இந்த பகுதி மக்களுக்காக பொன்மலை இரயில்வே பணிமனையை இரயில் பெட்டித் தொழிற்சாலையாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். ஆத்தூர் இரயில் நிலையம் முதல் பெரம்பலூர், அரியலூர் ரயில் நிலையம் வரை, புதிய அகல இரயில் பாதை அமைக்க ஆவன செய்யப்படும். நம்முடைய அமைச்சர் தம்பி மகேஷ் அடிக்கடி கோரிக்கை வைக்கும், தேசிய நெடுஞ்சாலையில் பால்பண்ணை முதல் துவாக்குடி வரை உயர்மட்டச் சாலை அமைக்கப்படும். அதுமட்டுமல்ல, தேர்தல் அறிக்கையில் சொல்லாத ஒன்றையும் இங்கு வாக்குறுதியாக கொடுக்க விரும்புகிறேன். அந்த உயர்மட்டச் சாலை அமைக்கப்படுவதோடு அணுகு சாலையும் அமைக்கப்படும். இப்படி, மக்களுக்கான திட்டங்களை சிந்தித்து செயல்படுத்த பாடுபடுபவர்கள்தான் நாம்! ஆனால், தமிழ்நாட்டில் சொல்வதற்கென்று, எதுவுமே இல்லாத ஆட்சியை நடத்தியவர்தான் பிரதமர் நரேந்திர மோடி! அவரால் சாதனைகளை சொல்ல முடியவில்லை.
பா.ஜ.க. ஆட்சியில் நடந்த ஊழல்கள் பற்றி, நாம் மட்டுமல்ல நாடு முழுவதும் கேள்வி கேட்டாலும் அவரால் பதில் சொல்ல முடியவில்லை!

இந்தப் பத்தாண்டு ஆட்சியில், ஊழல்கள் ஒன்றா – இரண்டா! அதற்கு, இமாலய எடுத்துக்காட்டுதான் இந்திய ஜனநாயகத்திற்கே அழிக்க முடியாத அவமானத்தை ஏற்படுத்தியிருக்கும் தேர்தல் பத்திர ஊழல்! கடந்த 5 ஆண்டுகளில் ED – I.T – C.B.I – இப்படிப்பட்ட, மத்திய அரசின் அமைப்புகளை பா.ஜ.க.வின் கைப்பாவையாகப் பயன்படுத்தி, அவர்களை ரெய்டிற்கு அனுப்புவது, பிறகு பா.ஜ.க.வுக்கு நிதியாகத் தேர்தல் பத்திரங்களை வாங்குவது என்று 8 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்திருக்கிறார்கள். வரலாற்றிலேயே இப்படி ஒரு வசூல் நடந்ததில்லை! அதுமட்டுமா, சி.ஏ.ஜி அறிக்கையில் வந்ததே! பாரத்மாலா திட்ட ஊழல், துவாரகா விரைவுப் பாதைக் கட்டுமானத் திட்ட ஊழல், சுங்கச்சாவடி கட்டண ஊழல், ஆயுஷ்மான் பாரத் திட்ட ஊழல், ஓய்வூதியத் திட்ட ஊழல், எச்.ஏ.எல். விமான வடிவமைப்புத் திட்ட ஊழல் என்று 7 இலட்சம் கோடி ரூபாய்க்கு முறைகேடு நடந்திருப்பதாக சி.ஏ.ஜி. அறிக்கை வெளியிட்டிருக்கிறது!

அந்த அறிக்கை மேல் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டிய மத்திய அரசு, அது பற்றி வாய் திறக்கவில்லை! தேர்தல் பத்திரம் போலவே மற்றொரு நிதியும் வசூல் செய்திருக்கிறார்! அதுவும் ‘பி.எம். கேர்ஸ் ஃபண்ட்’ என்று பேர் வைத்து வசூல் செய்திருக்கிறார்! அது பற்றிய அத்தனை இரகசியங்களும் ஜூன் மாதம் இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்ததும், அம்பலமாகும்! அதேபோல், ரஃபேல் ஊழல் ரகசியமும் நிச்சயமாக வெளியே வரும்! இப்படிப்பட்ட ஊழல் ஆட்சியை நடத்திய பிரதமர் மோடி ஊழலைப் பற்றி பேசலாமா? பா.ஜ.க. ஊழல்களை மறைக்க, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலைக் கைது செய்திருக்கிறார்கள். என்ன காரணம்? பா.ஜ.க.வின் தோல்வி பயம்தான் ஒரே காரணம்! டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவைக் கைது செய்து, 13 மாதங்களாகச் சிறையில் இருக்கிறார். சென்ற மாதம் ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் கைது செய்யப்படுகிறார். இப்போது அரவிந்த் கெஜ்ரிவால்! அப்பட்டமான பழிவாங்கும் நடவடிக்கை இல்லையா இது? தனக்கு எதிராக ‘இந்தியா’ என்ற வலிமையான கூட்டணியை எதிர்க்கட்சிகள் அமைத்து விட்டார்களே – மக்கள் பா.ஜ.க.வுக்கு எதிராக ஒன்று திரள ஆரம்பித்துவிட்டார்களே என்ற பயத்தில், தவறுகளுக்கு மேல் தவறுகளை செய்துகொண்டு வருகிறது, பா.ஜ.க. தலைமை! தமிழ்நாட்டில் நம்முடைய ஆட்சிக்கு தொந்தரவு கொடுக்க, ஆளுநரை வைத்து மிரட்டிப் பார்க்கிறார்கள். மக்களுக்கான சட்டங்களை நிறைவேற்றினால், அதற்கு ஆளுநர் ஒப்புதல் தராமல் நிறுத்துவார். நாம் ஒவ்வொரு முறையும் உச்சநீதிமன்றத்திற்குச் செல்ல வேண்டும். மக்களை எதிர்கொள்ள பயப்படும் பா.ஜ.க. அமலாக்கத்துறை, சி.பி.ஐ., வருமான வரித்துறை போன்ற புலனாய்வு அமைப்புகள் மூலமாகவும், ஆளுநர்கள் மூலமாகவும் எதிர்கொள்வது கோழைத்தனம். இது இந்தியா கூட்டணிக்கும், பாஜகவுக்குமான யுத்தம் அல்ல. இது இந்திய நாட்டு மக்களுக்கும் – பாசிச பா.ஜ.க.வுக்குமான யுத்தம்! இந்த யுத்தத்தில் மக்கள்தான் வெற்றி பெறுவார்கள். பாசிச பா.ஜ.க. வேரோடும் – வேரடி மண்ணோடும் வீழ்த்தப்படும். இந்திய மக்கள் இப்போது இந்தியா கூட்டணியின் பக்கம் அணி திரண்டுவிட்டார்கள்.பிரதமர் அவர்களே! ஜூன் 4-ஆம் தேதி வரவிருக்கும் செய்தி உங்கள் தூக்கத்தைத்தான் தொலைக்கப் போகிறது. தமிழத்துக்கு நிவாரணம் கேட்டால் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆணவமாகச் சொல்கிறார்! மக்களுக்கு நிவாரணம் வழங்குவது பிச்சையாம்! எவ்வளவு ஆணவம்! எவ்வளவு வாய்க் கொழுப்பு! மாண்புமிகு நிர்மலா சீதாராமன் அவர்களே… உங்கள் அரசியலுக்காக தமிழ்நாட்டு மக்களை கொச்சைப்படுத்துவீர்களா? பாதிக்கப்பட்ட மக்களை அவமானப்படுத்துவீர்களா? மக்களுக்குக் கொடுப்பது எதுவுமே பிச்சை அல்ல; அது அவர்களின் உரிமை! மக்கள் பாதிக்கப்படுகிறபோது அவர்களுக்கு உதவி செய்ய வேண்டியது, அரசியலில் இருக்கும் நம்முடைய கடமை! அந்தக் கடமையைத்தான் தி.மு.க. அரசு சரியாக செய்துகொண்டு இருக்கிறது. கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு பல்லாயிரம் கோடி தள்ளுபடி செய்கிறீர்களே… தொழிலதிபர்கள் கூட்டத்தில் சென்று இப்படி பேசுவீர்களா? ஏழைகள் என்றால் அவ்வளவு இளக்காரமா? ஒரு ரூபாய்க்கு பொருள் வாங்கினால்கூட வரி கட்டுகிறார்களே மக்கள்… அவர்கள் பாதிக்கப்படும்போது அரசாங்கம் உதவ வேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறா? மக்களுக்கு உதவ முடியவில்லை என்றால் எதற்கு நிதி அமைச்சர் பதவி? பா.ஜ.க.வில் இருக்கின்ற ஒவ்வொருவருக்கும் சொல்கிறேன்… உங்களுடைய இந்த ஆணவம்தான் பா.ஜ.க.வை வீழ்த்தப் போகிறது! இப்படிப்பட்ட எதேச்சாதிகார – சர்வாதிகார பா.ஜ.க.வைத் தமிழ்நாட்டில் இருக்கிற பழனிசாமி கண்டிக்கிறாரா? நம்மைப் போல் விமர்சனம் செய்கிறாரா? எங்காவது கண்டித்து அறிக்கை விடுகிறாரா? குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்துவிட்டு சிறுபான்மையினர் நலன் பேசுகிறார் பழனிசாமி.
பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்து, பா.ஜ.க.விற்கு பாதம்தாங்கியாக இருந்து, பா.ஜ.க. தமிழ்நாட்டுக்குச் செய்த அத்தனை துரோகங்களுக்கும் துணை நின்று, அதற்கு லாலி பாடியவர் பழனிசாமி. இப்போது அதே பா.ஜ.க.வின் கதை – திரைக்கதை – வசனம் – டைரக்‌ஷனில் கள்ளக்கூட்டணி நாடகத்தை நடத்திக்கொண்டு இருக்கிறார். பழனிசாமி நடத்தும் நாடகம் விரைவில் முடிவுக்கு வரும்! பா.ஜ.க.வின் பாசிச எண்ணங்களுக்கும் முடிவுரை எழுதப்படும்! இதெல்லாம் நடப்பதற்கு, நம்முடைய இந்தியா கூட்டணி மத்தியில் ஆட்சி அமைக்க வேண்டும்! அப்போதுதான், நம்முடைய இந்திய நாட்டையும் – இந்திய அரசியலமைப்புச் சட்டத்தையும் – நாட்டின் பன்முகத் தன்மையையும் – சகோதரத்துவத்தையும் – காப்பாற்ற முடியும்! இந்தியாவிற்கு ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்கக் காத்திருக்கும் இந்தியா கூட்டணிக் கட்சிகளுக்கு வாக்களிப்பீர் என்று உங்களில் ஒருவனாக – உங்களுக்காகவே உழைத்த தலைவர் கலைஞரின் மகனாகக் கேட்டுக் கொள்கிறேன். இந்தியாவைக் காக்கும் வெற்றிப் பயணத்தை திருச்சியில் இருந்து தொடங்குகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Error 403 The request cannot be completed because you have exceeded your quota. : quotaExceeded

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்