கள்ளச்சாராய விற்பனையை தடுக்க தவறிய திமுக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் பாஜக சார்பில் இன்று ( 22-06-2024) ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்திருந்தார். அதன்படி, தமிழகம் முழுவதும் பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோல, திருச்சியில் காந்தி மார்க்கெட் வளைவு அருகில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று திருச்சி மாநகர் மாவட்ட பாஜக தலைவர் ராஜசேகர் அறிவித்திருந்தார். ஆனால் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு திருச்சி மாநகர போலீசார் அனுமதி மறுத்தனர். இருந்தாலும் தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்ய பாஜகவினர் குவிந்தனர். இதன் காரணமாக காந்தி மார்க்கெட் வளைவு பகுதியில் கூடுதலாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. இந்நிலையில் திருச்சி மாநகர் மாவட்ட பாஜக தலைவர் ராஜசேகர் தலைமையில் நிர்வாகிகள் ஒண்டிமுத்து, காளீஸ்வரன், செல்வராஜ், முன்னாள் மாவட்ட தலைவர் லோகிதாஸ், மணிமொழி தங்கராஜ், லீமா சிவக்குமார், ஜெயந்தி, ஊடகப்பிரிவு துணைத் தலைவர் சிவகுமார், மல்லி செல்வம், ராஜேஷ், சதீஷ், கார்த்திக், சந்தோஷ் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் மார்க்கெட் பகுதியில் இருந்து தமிழக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பிக்கொண்டு ஊர்வலமாக ஆர்ப்பாட்டம் நடத்த திரண்டு வந்தனர்.
அப்போது பாஜக நிர்வாகி ஒருவர் தலையில் பானையை வைத்திருந்தார். அந்தப் பானையில் கள்ளச்சாராயம் ஒழிக என்று எழுதப்பட்டு இருந்தது. அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் ஆர்ப்பாட்டம் செய்ய வந்த பாஜக நிர்வாகிகளை தடுத்து நிறுத்தினர். இதனால் போலீசாருக்கும், பாஜகவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் போலீசார் பாஜக நிர்வாகிகளிடம் ஆர்ப்பாட்டம் நடத்த முயற்சி செய்தீர்கள் யென்றால் அனைவரையும் கைது செய்வோம் என்று கூறினார்கள். ஆனால், பாஜகவினர் தொடர்ந்து கோஷம் எழுப்பி கொண்டு ஆர்ப்பாட்டம் செய்ய முயன்றனர். இதை அடுத்து காந்தி மார்க்கெட் போலீசார் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற பாஜக மாவட்ட தலைவர் ராஜசேகர் உள்ளிட்ட நூற்றுக்கு மேற்பட்ட பாஜக நிர்வாகிகள், தொண்டர்களை கைது செய்து வேனில் ஏற்றினர். பின்னர், அவர்களை அருகில் உள்ள திருமண மண்டபத்திற்கு அழைத்து சென்று தங்க வைத்தனர்.
அவர்கள் மாலை விடுவிக்கப்படுவார்கள் என்று தெரிகிறது.
Comments are closed.