என்னை கொல்ல முயன்றதால் பா.ம.க. முன்னாள் நிர்வாகியை திட்டம் தீட்டி கொன்றோம்…
கைதான ரவுடி போலீசில் பரபரப்பு வாக்குமூலம்..
திருச்சி புத்தூர் ஆபிஸர்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்தவர் பிரபு என்கிற பிரபாகரன் (வயது 51). இவர் திருச்சி அரசு மருத்துவமனை எதிரே ஹோம் கேர் சர்வீஸ் என்ற பெயரில் வீடுகளுக்கு மருத்துவ சேவைக்கு நர்சுகள் அனுப்பி வைக்கும் நிறுவனம் மற்றும் ஆம்புலன்ஸ் நிறுவனம் நடத்தி வந்தார். முன்னாள் பாமக நிர்வாகியான இவர் கார் வாங்கி விற்கும் தொழிலும் செய்து வந்தார். இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்தநிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு இரவு முகமூடி அணிந்த 3 பேர் அலுவலகத்துக்குள் புகுந்து பிரபுவை அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்தனர். பின்னர் அங்கிருந்து தப்பி சென்றனர். இந்த கொலை சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து திருச்சி அரசு மருத்துவமனை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் .
மேலும், அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை பார்வையிட்டும் விசாரணையை துரிதப்படுத்தினர். இந்த கொலை தொடர்பாக அரியமங்கலம் மேல அம்பிகாபுரம் திடீர் நகரை சேர்ந்த லட்சுமணன் ( 38), பாரதியார் நகரை சேர்ந்த ரியாஸ் ராஜ் (24), அப்துல் கபூர் பஷீர் (29), தஞ்சாவூர் மகாதேவபுரம் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் பைலட் (30)ஆகிய 4 பேரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கைதானவர்களில் ஒருவர் பிரபுவால் நேரடியாக பாதிக்கப்பட்டவர் என்பதும், மற்ற 3 பேரும் கூலிப்படையாக செயல்பட்டதும் தெரிய வந்தது. மேலும் இந்த கொலையில் திருவெறும்பூர் கைலாஷ் நகர் பகுதியைச் சேர்ந்த ரவுடி அப்பு என்கிற ஹரி கிருஷ்ணன் (32) என்பவருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது.
சில ஆண்டுகள் பிரபுவிடம் டிரைவராக வேலை பார்த்த அப்பு பின்னர் தனியாக ஆம்புலன்ஸ் தொழிலை செய்து வந்தார். இதனால் பிரபுவுக்கும், அப்புவுக்கும் இடையே தொழில் போட்டி இருந்து வந்துள்ளது. இதனால் அப்பு திட்டமிட்டு கூலிப்படையை ஏவி இந்த கொலையை செய்தது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து பிரபல ரவுடி அப்புவை தனிப்படை போலீசார் துவாக்குடி செக்போஸ்ட் அருகில் வைத்து நேற்று மாலை பிடித்தனர். பின்னர் ரகசிய இடத்தில் வைத்து துருவித்துருவி விசாரணை நடத்தினர். விசாரணையில் போலீசாரிடம் என்னை கொல்ல முயன்றதால் பிரபுவை திட்டம் தீட்டி படுகொலை செய்ததாக வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். பின்னர் அப்புவை நீதிபதி முன்பு ஆஜர் படுத்திய போலீசார் பின்னர் அவரை திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.