கோவில் வளாகங்களில் வீடியோ, போட்டோ எடுக்க தடை: சினிமா பிரபலங்களுக்கு கட்டுப்பாடு…* இந்து சமய அறநிலையத்துறை அதிரடி..!
தமிழ்நாடு இந்து சமய அற நிலையத்துறை, திருக்கோயில்களில் பிரபலங்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் தரிசனத்திற்கு வருகை புரியும் நிகழ்வுகளில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-
- திரைத்துறை முதலான கலைத்துறை பிரபலங்கள், முக்கிய நபர்கள் திருக்கோயிலுக்கு தரிசனம் செய்ய வருவதாக தெரிந்தால் குறைந்தது ஒரு நாளுக்கு முன்பாக அல்லது தெரிய வந்தவுடன் அவர்கள் வரவிருக்கும் திருக்கோயில், வருகை நேரம், அவர்களுடன் வருபவர்களின் எண்ணிக்கை உள்ளிட்ட முழு விவரங்களையும் ஆணையர் அலுவலகத்திற்கு கட்டாயமாக தெரிவிக்க வேண்டும்.
- அத்தகைய வருகையின் போது, திருக்கோயில் வளாகத்திற்குள் புகைப்படம் எடுப்பதற்கும், காணொளி பதிவு செய்வதற்கும் எவ்வித அனுமதியும் வழங்கக் கூடாது.
- பிரபலங்கள் அல்லது முக்கிய பிரமுகர்களின் வருகையின் போது பொதுப் பக்தர்களின் தரிசனத்திற்கு எவ்வித இடையூறு ஏற்படாத வகையில் அவர்களின் நுழைவு மற்றும் இயக்கம் உரிய முறையில் ஒழுங்குபடுத்தப்பட வேண்டும். திருக்கோயிலின் புனிதத் தன்மையும், மரபு சார்ந்த ஒழுங்கும் எவ்விதத்திலும் பாதிக்கப்படக் கூடாது.
- முன்கூட்டியே அனுமதி வழங்கப்பட்டவர்கள் அல்லது பாதுகாப்பு மற்றும் நிர்வாகக் காரணங்களுக்காக அவசியமான அலுவலர்கள், பணியாளர்கள் மட்டுமே பிரபலங்கள் அல்லது முக்கிய பிரமுகர்களுடன் செல்ல அனுமதிக்கப்பட வேண்டும்.
- மேற்கண்ட அறிவுறுத்தல்கள் அனைத்து திருக்கோயில்களிலும் உடனடியாக நடைமுறைப்படுத்தபட வேண்டும். இவ்வறிவுறுத்தல்களை அனைத்து செயல் அலுவலர்களும் மற்றும் சம்பந்தப்பட்ட அலுவலர்களும் எவ்வித விதிவிலக்கும் இன்றி மிகக் கடுமையாக பின்பற்ற வேண்டும். இச்சுற்றறிக்கையினை தங்கள் ஆளுகைக்குட்பட்ட அனைத்து திருக்கோயில்களின் செயல் அலுவலர்கள், ஆய்வாளர்கள், அறக்காவலர்கள், நிர்வாகிகள் ஆகியோருக்கு அனுப்பி வைத்து உரிய அறிவுரைகளை வழங்கிட மண்டல இணை ஆணையர்களை கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Comments are closed.