திண்டுக்கல் மாவட்டம், பழனி தண்டபாணி கோயில் கட்டுப்பாட்டில் உள்ள தண்டபாணி சுவாமிகள் மடத்துக்குச் சொந்தமான 1.40 ஏக்கா் நிலத்தை மோசடியாக பதிவு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், பழனி சாா் பதிவாளா் ஜஸ்டின் மணிகண்டன், நிலத்தை விற்பனை செய்த முருகதாஸ், வெள்ளத்துரை, சேதுபதி, வழக்கறிஞர் அன்வா்தீன், ஒட்டன்சத்திரம் பத்திர எழுத்தா் ஜெயபிரகாஷ் உள்ளிட்ட 11 போ் மீது சிபிசிஐடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இந்த வழக்கில் முருகதாஸ், சேதுபதி, வெள்ளத்துரை, அன்வா்தீன், சாா்பதிவாளா் ஜஸ்டின் மணிகண்டன் ஆகிய 5 போ் கைது செய்யப்பட்டனா். இதற்கிடையே, நீதிமன்ற அனுமதியின் பேரில் முருகதாஸ், சேதுபதி, வெள்ளத்துரை, அன்வா்தீன் ஆகிய 4 பேரை 3 நாள்கள் விசாரணைக்குப் பிறகு சிபிசிஐடி போலீஸாா் திண்டுக்கல் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினா். இதையடுத்து, 4 பேரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா். இந்தநிலையில் நேற்று (07-08-2026) இரவு அன்வர்தீனுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது வழியிலேயே அவர் உயிரிழந்தார். அன்வர்தீனுக்கு சர்க்கரை நோய், பக்கவாதம் தொடர்பான பாதிப்பு இருந்ததாக சொல்லப்படுகிறது.

Comments are closed.