பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை: சென்னை மருத்துவமனை முன்பு ஆதரவாளர்கள் மறியல்-பதற்றம்…!
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ் மாநிலத் தலைவராக இருந்த வழக்கறிஞர் ஆம்ஸ்ட்ராங்(54) சென்னையில் நேற்று வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
பெரம்பூா் வேணுகோபால சுவாமி கோயில் தெருவில் புதிதாக கட்டப்படும் அவரது வீட்டை பாா்வையிட நேற்று(05-07-2024) மாலை காரில் சென்றாா். காா் அந்த வீட்டின் அருகே சென்றதும், காரை ஓரிடத்தில் நிறுத்திவிட்டு நண்பா்கள் வீரமணி, பாலாஜி ஆகியோருடன் ஆம்ஸ்ட்ராங் நடந்து சென்றாா். அப்போது 3 மோட்டாா் சைக்கிள்களில் வந்த 6 போ் கும்பல், தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் ஆம்ஸ்ட்ராங்கை சரமாரியாக வெட்டியது. இதைப் பாா்த்த அவரது நண்பா்கள் தடுக்க முயன்றனா். இதில் பாலாஜிக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. அரிவாள் வெட்டில் தலை, கழுத்துப் பகுதிகளில் ஆம்ஸ்ட்ராங் பலத்த காயமடைந்து கீழே விழுந்ததும் அந்த கும்பல் அங்கிருந்து தப்பியது. அப்பகுதி மக்கள் ஆம்ஸ்ட்ராங்கை மீட்டு, ஆயிரம்விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள், அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனா்.
இதுகுறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ஆம்ஸ்ட்ராங்கின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து இந்த கொலை வழக்கில் தொடா்புடைய குற்றவாளிகளைக் கைது செய்ய 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டது. தனிப்படையினா் அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதில், கொலையாளிகள் உணவு வினியோகம் செய்யும் ஒரு நிறுவன
சீருடையில் வந்தது தெரிய வந்தது. அவர்களை போலீசார் தேடி வந்த நிலையில் சென்னை அண்ணா நகர் காவல் நிலையத்தில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 8 பேர் சரணடைந்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதல் கட்ட விசாரணையில், ரவுடி ஆற்காடு சுரேஷ் கொலை வழக்கில் பழிக்கு பழி தீர்க்க இந்த படுகொலை நடத்தப்பட்டதாக தெரியவந்தது. அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் ஆதரவாளர்கள் மற்றும் அவரது உறவினர்கள் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் ஆம்ஸ்ட்ராங் கொலையில் சிபிஐ விசாரணை தேவை என கோஷம் எழுப்பினர். இதனால் பரபரப்பான காலை நேரத்தில் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. குறிப்பாக , சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே போக்குவரத்து 30 நிமிடத்திற்கு மேலாக தடைப்பட்டது. மாற்று வழியில் வாகனங்கள் இயக்கப்பட்டன. ஆம்ஸ்ட்ராங் ஆதரவாளருடன் போலீசார் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.
Comments are closed.