நாடாளுமன்ற தேர்தல் தோல்வி குறித்து கட்சி நிர்வாகிகளுடன் 10ம் தேதி முதல் 19ம் தேதி வரை எடப்பாடி பழனிசாமி ஆலோசனை…!
தேமுதிக, புதிய தமிழகம், எஸ்டிபிஐ கட்சிகளுடன் கூட்டணி அமைத்து நாடாளுமன்ற தேர்தலை அதிமுக சந்தித்தது. தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் தேமுதிகவுக்கு 5 தொகுதிகள், புதிய தமிழகம், எஸ்டிபிஐ கட்சிகளுக்கு தலா 1 தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதிமுக 33 தொகுதிகளில் போட்டியிட்டது. அதிமுக கூட்டணிக்கு புரட்சி பாரதம் கட்சி, அகில இந்திய பார்வர்டு பிளாக், பெருந்தலைவர் மக்கள் கட்சி, இந்திய குடியரசு கட்சி, தமிழ் மாநில முஸ்லிம் லீக், மனிதநேய ஜனநாயக கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் ஆதரவளித்தன. ஆனால், அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளால் ஒரு தொகுதியில் கூட வெற்றிபெற முடியவில்லை. 7 தொகுதிகளில் டெபாசிட் இழப்பு, 9 தொகுதிகளில் 3-ம் இடம், ஒரு தொகுதியில் 4-ம் இடம் என மோசமான நிலைக்கு சென்றது.
முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக, தேர்தல் களில் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருவது, கட்சி நிர்வாகிகளிடையே விமர்சனத்திற்கு உள்ளாகியது. இந்நிலையில், அதிமுக தோல்வியை சந்தித்தது ஏன்? என்பது குறித்து கட்சி நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளார்.
அதன்படி, 10-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் ஆலோசனை நடத்தப்பட உள்ளது.
அதன்படி, 10-ம் தேதி காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர், 11-ம்தேதி சிவகங்கை, வேலூர், திருவண்ணாமலை, அரக்கோணம், 12-ம் தேதி அரக்கோணம், தஞ்சாவூர், திருச்சி, 13-ம் தேதி சிதம்பரம், மதுரை, பெரம்பலூர், 14-ம் தேதி நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கிருஷ்ணகிரி, 16-ம் தேதி ராமநாதபுரம், திருநெல்வேலி, விருதுநகர், 17-ம் தேதி தென்காசி, தேனி, திண்டுக்கல், 18-ம் தேதி பொள்ளாச்சி, நீலகிரி, கோவை, 19-ம்தேதி விழுப்புரம், கன்னியாகுமரி, ஆரணி ஆகிய தொகுதி தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள், தலைமை செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள், எம்எல்ஏக்கள், எம்.பி.க்கள், முன்னாள் அமைச்சர்கள், தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் மற்றும் கட்சியின் அனைத்து நிலை பொறுப்பாளர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.
Comments are closed.