திருச்சி, காட்டூர் மாண்போர்ட் பள்ளியில் கலை மற்றும் விளையாட்டு திருவிழா: போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு…!
திருச்சி, காட்டூர் மாண்போர்ட் பள்ளியில் மண்டல அளவில் “எனர்ஜியா 24” என்ற தலைப்பில் தமிழகம் மற்றும் கேரளாவில் உள்ள மாண்போர்ட் பள்ளிகளுக்கு இடையேயான கலை மற்றும் விளையாட்டு போட்டிகள் பள்ளி கலையரங்கத்தில் தொடங்கியது. விழாவினை மாண்போர்ட் கபிரியேல் திருச்சி மண்டல தலைவர் அருட் சகோதரர் முனைவர் இருதயம், திருச்சிலுவை சபையின் திருச்சி மண்டல தலைவர் அருட்சகோதரி லூர்து அடைக்கலசாமி ஆகியோர் தொடங்கி வைத்தனர். பள்ளி முதல்வர் அருட் சகோதரர் ராபர்ட் மற்றும் திருச்சி கபிரியேல் சபையின் அனைத்து கல்வி ஒருங்கிணைப்பாளர்கள் முன்னிலை வகித்தனர். கலை மற்றும் விளையாட்டுப் போட்டிகள் தமிழ் வழி கல்வி, ஆங்கில வழி கல்வி பயில்வோர் என இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு நடத்தப்பட்டது.
7 தமிழ் வழி கல்வி பள்ளிகளும் மற்றும் 10 ஆங்கில வழி கல்வி பள்ளிகளும் என மொத்தம் 17 பள்ளிகளில் இருந்து 1300க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் இதில் பங்கேற்றனர். வெவ்வேறு அரங்குகளில் நடைபெற்ற மேற்கத்திய நடனம், நாட்டுப்புற நடனம், மௌன நாடகம் மற்றும் பரதநாட்டியம் நிகழ்ச்சிகளுக்கு பல்வேறு கலைத்துறைகளைச் சேர்ந்த வல்லுநர்கள் நடுவர்களாக பங்கேற்றனர். 100 மீ., 200 மீ., 400 மீ., 4x 100 மீ தொடர் ஓட்டப்பந்தயம், 4 x400 மீட்டர் தொடர் ஓட்ட பந்தயம் என பல்வேறு விளையாட்டு போட்டிகள் திருச்சி அண்ணா விளையாட்டு மைதானத்தில் நடத்தப்பட்டது. இதில், வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா காட்டூர் மாண்போர்ட் பள்ளி கலை அரங்கத்தில் நடைபெற்றது. கபிரியேல் திருச்சி மண்டல தலைவர் அருட்சகோதரர் இருதயம், திரைப்பட இயக்குனர் பிரபு சாலமன், திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி முதல்வர் பிரின்சி மெர்லின் ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு கேடயங்கள் மற்றும் பரிசுகளை வழங்கி சிறப்புரையாற்றினார்கள். முடிவில் பள்ளி முதல்வர் அருட் சகோதரர் ராபர்ட் நன்றி கூறினார்.
Comments are closed.