வேளாங்கண்ணி மாதா கோவில் திருவிழாவை முன்னிட்டு கேரளாவில் இருந்து திருச்சி வழியாக 21-ம் தேதி முதல் சிறப்பு ரயில் இயக்கம்…!
நாகை மாவட்டம், வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா பேராலய திருவிழா ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் 29-ம் தேதி தொடங்கி 10 நாட்கள் விமரிசையாக நடைபெறும். திருவிழாவில் தமிழகம் மட்டுமன்றி கேரளா, மும்பை, ஆந்திரா, கோவா உள்பட பிற மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். இந்த ஆண்டு திருவிழா ஆகஸ்ட் 29- ம் தேதி தொடங்கி செப்டம்பர் மாதம் 8-ம் தேதி வரை நடைபெறுகிறது. விழாவின் கொடியேற்றம் மற்றும் தேர்பவனியின் போது சுமார் 5 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆகவே, தென் மாவட்ட பக்தர்களுக்காக, கேரள தலைநகர் திருவனந்தபுரத்திலிருந்து ஆகஸ்ட் 21-ம் தேதி முதல் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் குழித்துறை, நாகர்கோவில் டவுன், வள்ளியூர், திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
ஆகஸ்ட் 21, 28, செப்டம்பர் 4 ஆகிய 3 நாட்கள்(புதன்கிழமை) மேற்கண்ட சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. திருவனந்தபுரத்திலிருந்து புதன்கிழமை பகல் 3.25 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் அதிகாலை 3.55 மணிக்கு வேளாங்கண்ணிக்கு சென்றடையும். மறுமார்க்கத்தில், வேளாங்கண்ணியிலிருந்து ஆகஸ்ட் 22, 29, செப்டம்பர் 5(வியாழக்கிழமை) ஆகிய 3 நாட்கள் மேற்கண்ட சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. வியாழக்கிழமை இரவு 7.10 மணிக்கு புறப்படும் ரயில், மறுநாள் காலை 6.55 மணிக்கு திருவனந்தபுரத்தை சென்றடையும். இந்த ரயிலில் செல்ல விரும்புவோர் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று தெற்கு ரயில்வே சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
Comments are closed.