தமிழ்நாடு உள்பட தேசிய அளவில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும், தேசிய மதுவிலக்கு சட்டம் இயற்ற வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மகளிர் விடுதலை இயக்கத்தின் சார்பில் மது மற்றும் போதை பொருள் ஒழிப்பு மகளிர் மாநாடு கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் இன்று(2-10-2024) மாலை 3 மணி அளவில் நடைபெற உள்ளது. மாநாட்டிற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் தலைமை தாங்கி மாநாட்டை தொடங்கி வைக்கிறார். இதில், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, தி.மு.க. செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க துணை தலைவர் வாசுகி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் ஆனி ராஜா, காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சுதா உள்ளிட்ட தோழமைக் கட்சியினர் கருத்துரை ஆற்றுகின்றனர். மாநாட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மகளிர் விடுதலை இயக்கத்தின் தலைமை இடத்து பொறுப்பாளர்கள், மாநில பொறுப்பாளர்கள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் கூட்டணி கட்சிகளின் மகளிர் அணி நிர்வாகிகள், தொண்டர்கள் என பல்லாயிரக்கணக்கான கலந்து கொள்ள உள்ளனர். இதையொட்டி பிரம்மாண்டமான முறையில் மாநாடு முகப்புகள், பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளன. பெண்களே நடத்தும் இந்த மாநாட்டின் மூலம் தமிழ்நாடு உட்பட தேசிய அளவில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் மது மற்றும் போதை பொருட்களை முழுவதும் ஒழிக்க சட்டம் இயற்ற வேண்டும் உள்ளிட்ட நோக்கம் குறித்து எடுத்துரைக்கப்படுகிறது.
Comments are closed.