திருச்சி டி.ஐ.ஜி. வருண்குமார் தொடர்ந்த அவதூறு வழக்கில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று(08-04-2025) திருச்சி நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார். . வழக்கு விசாரணை முடிந்து வெளியே வந்த அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், சென்னையில் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட வழக்கில் மூன்று பேர் என்கவுண்டர் செய்யப்பட்டனர். அதேபோன்று அமைச்சர் நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக விசாரிக்கப்பட்ட 2 பேரை என்கவுண்டர் செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளனர். தமிழகத்தில் தற்போது நடந்து வரும் அனைத்து என்கவுண்டர்களும் போலியானது. உண்மையான குற்றவாளிகளை கண்டறியாமல் வழக்கை முடிப்பதிலேயே காவல்துறை முனைப்பு காட்டுகிறது. யார் வேண்டுமானாலும் எந்த மொழி வேண்டுமானாலும் படிக்கலாம் என்பதே எனது நிலைப்பாடு. ஆனால், தமிழுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். தமிழ் எனக்கு உயிர் மூச்சு. நான் இதுவரை யாருடனும் கூட்டணி வைக்காமல் தனித்தே போட்டியிட்டு வருகிறேன். வருகிற சட்டமன்றத் தேர்தலிலும் இதே நிலைப்பாடு தான். நான் கூட்டணி வைக்கப் போவதே அமெரிக்க அதிபர் ட்ரம்போடுதான் என தமாஷாக கூறினார். அமைச்சர் கே.என்.நேரு வீட்டில் அமலாக்கத்துறை சோதனை தொடர்பான கேள்விக்கு, தேர்தல் நேரங்களில் இதுபோன்று சோதனைகள் நடத்துவது வாடிக்கையான ஒன்றுதான் என்று பதிலளித்தார். அண்மையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை, சீமான் சந்தித்து பேசியதாகவும், இதன் காரணமாக பாஜக கூட்டணிக்குள் நாம் தமிழர் கட்சியும் சேர இருப்பதாக சமீபத்திய நாட்களாக செய்திகள் பரவிய வண்ணம் இருந்தன. ஆனால் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அவரது பேட்டி அமைந்தது குறிப்பிடத்தக்கது.
Comments are closed.