இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று(04-06-2024) காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு சுற்று வாரியாக முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் விஐபி வேட்பாளர்களாக கருதப்படும் பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட பலரும் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகின்றனர். இவர்களின் வெற்றி ஏறக்குறைய உறுதியானாலும் ஓட்டு வித்தியாசம் யாருக்கு அதிகம் கிடைக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அந்தவகையில் மாலை 4 மணி நிலவரப்படி இந்தியாவிலேயே அதிகபட்சமாக அமித்ஷா மட்டுமே 7 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். காந்திநகர் தொகுதியில் அவர் 9.80 லட்சம் ஓட்டுகளை பெற்றுள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரசின் சோனல் ராமன்பாய் படேல் 2.55 லட்சம் ஓட்டுகளையே பெற்றுள்ளார் இதன்மூலம் 7 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் அமித்ஷா வெற்றி வாகை சூட உள்ளார். கடந்த 2019 லோக்சபா தேர்தலில் இதே தொகுதியில் 5.57 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கேரளாவின் வயநாடு மற்றும் உத்தர பிரதேசத்தின் ரேபரேலி ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்டார். தற்போதைய நிலவரப்படி ரேபரெலி தொகுதியில் ராகுல் காந்தி 6 லட்சத்து 61 ஆயிரத்து 997 ஓட்டுகள் பெற்றுள்ளார் . 3 லட்சத்து 73 ஆயிரத்து 280 ஓட்டுகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் தினேஷ் பிரதாப் சிங் 2 லட்சத்து 88 ஆயிரத்து 717 ஓட்டுகள் மட்டுமே பெற்றுள்ளார். இதன் மூலம் ராகுல்காந்தி சுமார் 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவது உறுதியாகியுள்ளது. வயநாடு தொகுதியில் ராகுல் 6 லட்சத்து 30 ஆயிரத்து 543 ஓட்டுகள் பெற்றுள்ளார்.
3 லட்சத்து 54 ஆயிரத்து 728 ஓட்டுகள் முன்னிலையில் உள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ஆனி ராஜா 3 லட்சத்து 54 ஆயிரத்து 815 ஓட்டுகள் மட்டுமே பெற்றுள்ளார். இதன்மூலம் அங்கும் ராகுல் காந்தி 3 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவது உறுதியாகியுள்ளது. ஆனால், வாரணாசி தொகுதியில் போட்டியிட்ட பிரதமர் மோடி தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வந்த நிலையில் ஐந்தாவது சுற்று வாக்கு எண்ணிக்கையில் முன்னிலை வகித்தார். ஆனால், அவர் அமித்ஷா, ராகுல் காந்தி போல பெரிய அளவு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவது கடினம் என்று சொல்லப்படுகிறது.
*”
Comments are closed.