தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தொகுதிகளில் கோவை தொகுதியும் ஒன்று. காரணம் இந்த தொகுதியில் தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலை போட்டியிட்டது தான். அண்ணாமலையை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, ஜே.பி நட்டா உள்ளிட்ட பலர் பிரச்சாரம் மேற்கொண்டனர். திமுக வேட்பாளராக கணபதி ராஜ்குமார் களம் இறக்கப்பட்டார். அனைவராலும் ஆவலோடு எதிர்பார்க்கப்பட்ட இந்த தொகுதியின் வாக்கு எண்ணிக்கையும் இன்று (04-06-2024) காலை தொடங்கியது.
ஒவ்வொரு சுற்று முடிவிலும் இரு வேட்பாளர்களும் மாறி மாறி முன்னிலை வகித்தாலும் கணபதி ராஜ்குமாரின் கையே ஓங்கியது. அடுத்தடுத்த சுற்றுகளில் திமுகவே தொடர்ந்து முன்னிலை பெற்று வருகிறது. இதனை கொண்டாடும் விதமாக கோவை மாநகர திமுக துணைச் செயலாளர் கோட்டை அப்பாஸ் தலைமையில் கோட்டைமேடு பகுதியில் பொது மக்களுக்கு சுடச்சுட மட்டன் பிரியாணி சமைத்து வழங்கப்பட்டது. குறிப்பாக தேர்தல் பிரச்சாரத்தின் போது திமுக, பாஜக இடையே கருத்து மோதல்கள் ஏற்பட்டன. அப்போது திமுகவினர், கோவை தொகுதியில் கண்டிப்பாக திமுக ஜெயிக்கும். அவ்வாறு ஜெயிக்கும் பட்சத்தில் பொதுமக்களுக்கு மட்டன் பிரியாணி வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தனர். சொன்னபடியே திமுக வெற்றி முகத்தில் இருக்கிறது. இதனை முன்னிட்டு சுடச்சுட மட்டன் பிரியாணி சமைத்து பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
Comments are closed.