Rock Fort Times
Online News

அலைபாயுதே சினிமா பாணியில் திருமணம்: லாட்ஜில் காதல் மனைவியை கொலை செய்த வாலிபர் கைது…!

புதுச்சேரி வம்பா கீரப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பிரதீப் (வயது 27). போட்டோகிராபரான இவர் அபூர்வா (22) என்ற பெண்ணை காதலித்தார். இருவரும் வீட்டாருக்கு தகவல் சொல்லாமலேயே கடந்த 2023ம் ஆண்டு பதிவு திருமணம் செய்துள்ளனர். பெற்றோர் சம்மதத்துடன் முறைப்படி திருமணம் நடக்கும் வரை அவரவர் வீட்டிலேயே தங்கி இருப்பது என இருவரும் ‘அலைபாயுதே’ சினிமா பாணியில் முடிவு செய்துள்ளனர். இந்தநிலையில் பிரதீப், தனது மனைவி அபூர்வாவுடன் சுப்ப ராயப்பிள்ளை வீதியில் உள்ள ஒரு தனியார் லாட்ஜில் அறை எடுத்து தங்கியுள்ளார்.  சம்பவத்தன்று இரவு பிரதீப், அபூர்வாவை தோளில் சுமந்தபடி லாட்ஜ் அறையில் இருந்து கீழே வந்துள்ளார்.  அப்போது, விடுதியில் பணியில் இருந்த கார்த்திக் என்பவர் சந்தேகமடைந்து பிரதீப்பிடம் என்ன நடந்தது என கேட்டுள்ளார். அதற்கு பிரதீப், அபூர்வா மயங்கி விட்டதாகவும் மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என கூறியுள்ளார். இதை நம்பிய கார்த்திக் ஒரு ஆட்டோவைப் பிடித்து அபூர்வாவை புதுச்சேரி அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளார். அதன்பிறகு கார்த்திக் மருத்துவமனைக்குச் சென்று பார்த்தபோது, அபூர்வா முகம் முழுவதும் காயத்துடன் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவது தெரிய வந்தது.  இதுகுறித்து கார்த்திக் விசாரித்தபோது அபூர்வாவின் நடத்தை மீது சந்தேகப்பட்டு அவரை கோபத்தில் தாக்கியதாக பிரதீப் சொல்லி இருக்கிறார். அதையடுத்து பெரியக்கடை காவல்நிலையத்தில் கார்த்திக் இது குறித்து புகார் அளித்தார்.  அதன்பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் தலைமையிலான போலீஸார் பிரதீப் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அபூர்வா சிகிச்சை பலனின்றி இறந்ததை அடுத்து இதனை கொலை வழக்காக மாற்றிய போலீஸார், மேல் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்