Rock Fort Times
Online News

பாஜகவுடன் கூட்டணி அமைத்தது அதிமுக..!- தமிழக அரசியலில் திடீர் திருப்பம் !

தமிழக பாஜக மாநிலத் தலைவரைத் தேர்வு செய்யும் பொருட்டும், அதிமுகவுடன் கூட்டணியை உறுதிப்படுத்தும் விதத்திலும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இரண்டு நாள் பயணமாக தமிழ் நாட்டுக்கு வருகை தந்துள்ளார். அதன்படி, இன்று நடைபெற்ற பாஜக மாநில தலைவர் தேர்தலுக்கான விருப்ப மனுத் தாக்கலின்போது, நயினார் நாகேந்திரன் மட்டுமே தாக்கல் செய்ததைத் தொடர்ந்து, அவர் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்த அறிவிப்பு நாளை வெளியாகும் எனக் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, சென்னை கிண்டியில் அமைச்சர் அமித் ஷாவை, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். இக்கூட்டத்தில் அண்ணாமலை உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதையடுத்து, செய்தியாளர்களைச் சந்தித்த அமித் ஷா, “அதிமுக – பாஜக கூட்டணி உறுதியாகி உள்ளது” எனத் தெரிவித்தார். இதுதொடர்பாக அவர், “எங்கள் கூட்டணி உறுதியாக உள்ளது. இதில் எந்தக் குழப்பமும் இல்லை. இபிஎஸ் தலைமையிலேயே கூட்டணி. யாருக்கு எத்தனை தொகுதி, வெற்றிபெற்ற பின் எப்படி ஆட்சியமைப்பது என்பது பின்னர் விவாதிக்கப்படும். அதிமுக எந்த நிபந்தனையும் வைக்கவில்லை. 2026 தேர்தலில் கூட்டணி ஆட்சிதான். தேர்தல் விஷயங்களில் இணைந்து செயல்படுவோம். 1998இல் இருந்தே அதிமுகவுடன் கூட்டணி அமைத்து வருகிறோம். இது, இயல்பான கூட்டணி. அதிமுக உட்கட்சிக் கூட்டத்தில் தலையிட மாட்டோம்” எனப் பதிலளித்தார். தொடர்ந்து அவரிடம், “அண்ணாமலை மாற்றத்திற்குப் பிறகுதான் அதிமுகவுடன் உறுதியானதா” எனும் கேள்விக்கு, ”இன்றும் அண்ணாமலைதான் மாநில பாஜக தலைவர்” எனத் தெரிவித்தார்.முன்னதாக, அண்ணாமலை மாற்றத்திற்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் பங்கு இருப்பதாக தகவல் வெளியான நிலையில், அமித் ஷா இதற்குப் பதில் அளித்துள்ளார். எனினும், அவருக்கு தேசிய அளவில் பொறுப்பு வழங்கப்படும் என அமித் ஷா தெரிவித்துள்ளார். இதுகுறித்த கேள்விக்கும் அவர், “நாங்கள் முடிவு எடுப்போம்” எனத் தெரிவித்துள்ளார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்