தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 19ம் தேதி 39 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடக்கிறது. தேர்தலுக்கு குறுகிய காலமே இருப்பதால் கட்சியினர் தேர்தல் பிரசாரத்தில் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது தேர்தல் பிரச்சாரத்தை திருச்சியில் இருந்து தொடங்குகிறார். இதற்காக திருச்சி மாவட்டம் வண்ணாங்கோவிலில் இன்று (24.03.2024) பிரமாண்ட தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடக்கிறது. இதில் கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்கின்றனர். இதனை முன்னிட்டு அப்பகுதியில் போக்குவரத்து மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இன்று மதியம் 12 மணியிலிருந்து அத்யாவசிய பொருட்கள், அவசர தேவைக்கான வாகனங்கள் மற்றும் பொதுக்கூட்டத்திற்கு வரும் வாகனங்களை தவிர, மற்ற அனைத்து வாகனங்களும் அதற்காக வகுக்கப்பட்டுள்ள மாற்று பாதையில் செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். சென்னையிலிருந்து திண்டுக்கல் நோக்கி செல்லும் அனைத்து கனரக வாகனங்களும் திருச்சி மாநகரம் மன்னார்புரத்திலிருந்து பஞ்சப்பூர், மணிகண்டம், விராலிமலை, மணப்பாறை வழியாக செல்ல வேண்டும். திண்டுக்கல்லில் இருந்து சென்னை நோக்கி செல்லும் அனைத்து கனரக வாகனங்களும் மணப்பாறை, தோகைமலை, குளித்தலை, முசிறி, துறையூர் வழியாக செல்ல வேண்டும்.
திருச்சியிலிருந்து மணப்பாறை செல்லும் வாகனங்கள் மன்னார்புரத்திலிருந்து பஞ்சப்பூர், மணிகண்டம், விராலிமலை, நொச்சிமேடு ஜங்சன் வழியாக செல்ல வேண்டும். மணப்பாறையிலிருந்து திருச்சி செல்லும் வாகனங்கள் நொச்சிமேடு ஜங்சன், விராலிமலை, மணிகண்டம், பஞ்சப்பூர் வழியாக செல்ல வேண்டும்
என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.