ஆடி18-ஐ முன்னிட்டு ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறையில் குவிந்த யாசகர்கள்- கொத்தாக அள்ளி சென்றது காவல்துறை…! ( வீடியோ இணைப்பு)
எந்த ஆண்டும் இல்லாத வகையில் இந்த ஆண்டு காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் தண்ணீர் கரை புரண்டு ஓடுகிறது. இந்நிலையில் இன்று (03-08-2024)
ஆடி 18 என்பதால் அதிகாலை முதலே ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறை, ஓடத்துறை மற்றும் காவிரி, கொள்ளிடம் கரையோரங்களில் பெண்கள் மற்றும் புதுமண தம்பதிகள் பெருந்திரளாக குவிந்து படையல் இட்டு காவிரி அன்னையை வணங்கி வருகின்றனர். ஆடி 18-ஐ முன்னிட்டு அம்மா மண்டபம் படித்துறையில் கூட்டம் அதிகமாக இருந்து வருகிறது. கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்காகவும், அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் பொருட்டும் ஒரு இன்ஸ்பெக்டர், ஒரு சப்- இன்ஸ்பெக்டர் தலைமையில் 10 பேர் கொண்ட குழு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது ஒருபுறம் இருக்க ஆடி 18 கொண்டாட சாரை, சாரையாக வரும் பொதுமக்களிடம் யாசகம் பெறுவதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான யாசகர்கள் அம்மா மண்டபம் படித்துறையில் குவிந்தனர். அவர்களில் சில பெண்கள் கை குழந்தைகளையும் கையில் வைத்திருந்தனர். அவர்கள் பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் யாசகம் பெற்றுக் கொண்டிருந்தனர். இதுகுறித்து சிலர் போலீசாரிடம் புகார் அளித்தனர். புகாரின்பேரில் அவர்களை பிடித்த காவல்துறையினர் அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்து அவர்களுக்கு தேவையான உணவு, தண்ணீர் போன்ற அடிப்படை வசதிகளை ஏற்பாடு செய்து கொடுத்தனர். அவர்கள் மாலையில் விடுவிக்கப்படுவார்கள் என்று தெரிகிறது.
Comments are closed.