Rock Fort Times
Online News

திருச்சியில் துணிகரம்: மாநகராட்சி பள்ளி பூட்டை உடைத்து பணம் திருட்டு, பொருட்கள் சூறை…!

திருச்சி கோர்ட் எம்.ஜி.ஆர்.சிலை அருகில் மாநகராட்சி தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த பள்ளியின் தலைமை ஆசிரியராக இருப்பவர் அம்சவல்லி.  நேற்று மாலை வழக்கம்போல பள்ளியை பூட்டி விட்டு அனைவரும் வீட்டுக்கு சென்று விட்டனர்.
இன்று(25-04-2024)  காலை வந்து பார்த்தபோது பள்ளியின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

உள்ளே சென்று பார்த்தபோது தலைமை ஆசிரியை அறையில் பீரோவில் வைத்திருந்த  ரூ. 25 ஆயிரம் திருட்டு போய் இருந்தது. மேலும், பள்ளியில் இருந்த மின்விசிறிகள், விளையாட்டு பொருட்கள் சூறையாடப்பட்டு கிடந்தன. நூலகத்திலும் புத்தகங்கள் ஆங்காங்கே சிதறி கிடந்தன. இதுகுறித்து தலைமை ஆசிரியை அம்சவல்லி திருச்சி அரசு மருத்துவமனை போலீசில் புகார் அளித்தார் .புகாரின் பேரில் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

அப்போது அந்த பள்ளி பகுதியில் இரவு நேரங்களில் சமூக விரோத கும்பல் மது அருந்துவதாகவும், சட்ட விரோத செயல்கள் நடப்பதாகவும் பள்ளியின் தரப்பில் போலீசாரிடம் தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் சமூக விரோத கும்பல் இந்த செயலில் ஈடுபட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்